மேஷத்தில் ராகு உடன் சேர்ந்த குரு..திடீர் லக்..அள்ள அள்ள குறையாத பண வருமானம் யாருக்கு வரும்?
சென்னை: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்துள்ளார். ஒரு ராசியில் குருவும் ராகுவும் இணையும் போது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கேதுவின் பார்வையும் கூடவே ஆட்சி பெற்ற சனியின் பார்வையும் கிடைப்பதால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமும் ராஜயோகமும் தேடி வரும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக பிரகஸ்பதி என்று அழைக்கப்பட்டார். குருவும் ராகுவும் ஒரு ராசியில் இணையும் அமைப்பு குரு சண்டாள யோகத்தை தரக்கூடியது. ராகு பகவானை புனிதப்படுத்தப்போகிறார் குருபகவான். பலருக்கும் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகிறார்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசியில் ராகு சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராகு காலம் என்பதால் மன குழப்பமும், குடும்பத்தில் குழப்பமும் ஏற்பட்டு வந்தது இனி குழப்பங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. ராகு பகவானுடன் குரு இணைந்து புனிதப்படுத்துகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முதலீடுகளில் லாபம் கிடைக்கும். எந்த நல்ல காரியமும் நடைபெறாமல் தடை இருந்தது இனி தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. குருவின் பார்வையும் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். பண வருமானத்தில் இருந்த தடைகள் பிரச்சினைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் குரு இணைகிறார். எதிர்பாராத பண வரவு வரும். கடந்த சில மாதங்களாக மனதில் இருந்த தடுமாற்றம் விலகப்போகிறது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். சுப விரைய செலவுகள் ஏற்படும். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் இருந்த சுமைகளும் அழுத்தங்களும் முடிவுக்கு வரும். மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
மிதுனம்: ராகு உடன் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் உங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. நண்பர்கள் உறவினர்களின் உதவி தேடி வரும். வீடு வாங்குவதற்கான லோன் கிடைக்கும். முடியாமல் தள்ளிப்போன காரியங்கள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாழக்கிழமையன்று குரு பகவானை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
கடகம்: குரு பகவான் ராகு உடன் இணைந்து பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு சண்டாள யோகத்தால் உங்களுக்கு பல வழிகளில் பணம் வரும். ராகு,குருவின் மீது சனி பகவானின் பார்வை விழுகிறது. திருமண யோகம் வரப்போகிறது. வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் இருப்பவர்களின் சுய ரூபம் புரியும். பண முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் போது கவனம் தேவை.
சிம்மம்: ராகு உடன் இணைந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சனிபகவானின் பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் சமூகத்தில் கவுரவம் உயரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தடைகள் நீங்கும். குரு பாக்ய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. ஒன்பதாம் வீட்டு அதிபதி சனியும் லாப ஸ்தான அதிபதி குருவும் இணைவதால் பதவியில் யோகம் கிடைக்கும். சந்தோஷமான செய்திகள் தேடி வரும். உங்கள் நிறைய பண வரவு வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. திடீர் யோகம் வரும். பவுர்ணமி நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.
கன்னி: புத்திசாலித்தனம் அதிகம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, திடீர் யோகம் கிடைக்கும். குரு சண்டாள யோகம் கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு உடன் குரு பகவான் இணைந்து பயணம் செய்கிறார். உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தம் நீங்கும். புத்துணர்ச்சி அதிகரிக்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன குழப்பம் நீங்கி தெளிவு அதிகரிக்கும். அதிகாரப்பதவி தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.
துலாம்: உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் குரு இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பீர்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நிறைய யோகங்கள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அள்ள அள்ள குறையாமல் பணம் பல வழிகளில் வரும்.
விருச்சிகம்: குரு பகவான் ஆறாம் வீட்டில் ராகு உடன் இணைந்துள்ளார். உங்களுக்கு ராஜயோகம் தேடி வரும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம். ஆறாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன், நோய், எதிர்ப்பு நட்பு விசயத்தில் கவனமாக இருக்கவும். எந்த செயலை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களே.. இதுநாள் வரை சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் இதுநாள் வரை ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ராகு உடன் குரு இணைந்திருப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வையால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். ஒருமுறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவது நன்மையைத் தரும்.

மகரம்: உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் இணையும் குரு ராகு சேர்க்கையால் வீடு மாற்றம் ஏற்படும். புது வீடு வாங்குவீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மை செய்தவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். குரு பகவான் நான்காம் வீட்டில் ராகு உடன் இணைந்து குரு சண்டாள யோகம் பெறுகிறார். மிகப்பெரிய ராஜயோகம் தேடி வரப்போகிறது. உங்களுக்கு தொழில் ஜீவனத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது என்றாலும் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.
கும்பம்: மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு ராகு குரு சேர்க்கையால் இது நாள் வரை ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். குரு சண்டாள யோக அமைப்பினால் சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இனி வரும் கால கட்டத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நல்ல நட்பு தேடி வரும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் வரப்போகிறது.
மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் குரு இரண்டாம் வீட்டில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குரு சண்டாள யோகத்தால் குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். திருமண சுப காரியம் கை கூடி வரும். ஏழரை சனி காலம் என்பதால் சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும் ஒற்றுமை ஏற்படும். குழப்பங்கள் நீங்கி மனநிலை தெளிவாக இருக்கும் ஏழரை சனியாக இருப்பதால் ஒருவித பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். ராகு உடன் குரு இணைவதால் பதற்றம் நீங்கி நன்மை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications