குரோதி தமிழ் புது வருட ராசி பலன்: வாழ்க்கையில் ஆனந்தம்.. மன நிம்மதி யாருக்கு கிடைக்கும்?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சுப கிரகமான குரு பகவான் சித்திரை 18ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சனி பகவான் ஆண்டின் இறுதியில் பங்குனி மாதம் 15ஆம் தேதி மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரோதி புத்தாண்டு என்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்: அசுர குரு ஆட்சி செய்யும் வீட்டில் தேவ குரு பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. செவ்வாய் சனி சேர்க்கை பத்தாம் வீட்டில் சேர்ந்திருக்கும் போது புது வருடம் பிறக்கிறது. வேலையில் இடமாற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும்.

ராசியில் வரும் குரு: குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் ஆண்டுகளின் மீது விழுகிறது. குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டைப் பார்ப்பதால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். மகளுக்கோ, மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்ட நிலை மாறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நல்லவிதமாக முடியும்.
குரு பலன் : களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் திருமணம் கைகூடி வரும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
குரு பார்வை யோகம்: உங்களின் 9ஆம் வீட்டை குரு பார்ப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். பயணங்கள் சாதகமாகும். பதவிகள் பட்டங்கள் கிடைக்கலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். மனைவி வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும்.
ஜென்ம குரு என்பதால் பண விசயத்தில் கவனம் தேவை. எவருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, பணம் நகையை யாருக்கும் இரவல் தருவதோ வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அசைவ, கார உணவுகளைக் குறையுங்கள். வீண் செலவுகளையும் தவிர்க்கவும்.
படிப்பில் அக்கறை தேவை: மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும். அதிக அக்கறையோடு படித்தால் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படும். குரோதி புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது நல்லது. சஷ்டி, கிருத்திகை நட்சத்திர நாட்களில் பாலபிஷேகம் செய்து வழிபட பாதிப்புகள் குறையும். சங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதிப்பீர்கள். குரோதி ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
அரசு வேலை: ராசிக்கு லாப வீட்டில் ராகுவும் கேது பகவான் 5ஆம் வீட்டிலும் பயணம் செய்வதால் சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனத்தை வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக நடைபெறும். பெற்றோர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் மருத்துவ செலவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன் யோசனை தேவை. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அரசு வேலை, பதவி உயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளம் கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும்.
மன நிம்மதி தரும் குரோதி ஆண்டு: பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்கள் நகைகளில் இன்வெஸ்ட் செய்வீர்கள். குரு உங்கள் ராசிக்குள் வருவதால் நிறைய சாதிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் புதன்கிழமைகளில் ஹயக்ரீவரை வழிபட நன்மைகள் நடைபெறும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்கள் ஆனந்த கண்ணீர் விடும் அற்புதமான ஆண்டாக குரோதி ஆண்டு அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications