மார்கழி ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் - 23ல் மகா அபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிவில் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை 22ஆம் தேதி நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23ஆம் தேதி நடக்கிறது.
சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.
மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.
திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.

ஆருத்ரா விழா கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாதிரை திருவிழா கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை 22ஆம் தேதி நடைபெறுகிறது. பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.

நெல்லையில் ஆருத்ரா தரிசனம்
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இந்த ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழா 23ஆம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி குறிச்சி
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா
எல்லாம் வல்ல சொக்கநாதர் திருவருளால் பல வருடங்களுக்கு பிறகு வருகின்ற மார்கழி திருவாதிரை திருநாளில் 23.12.18 (ஞாயிற்றுகிழமை) காலை 9.00 மணிக்கு பொற்சபை நாயகர் ஸ்ரீ நடராஜபெருமான் திருவீதி உலா நடைபெறுகிறது
நெல்லையப்பர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் திருவாதிரை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 23ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

கயிலாய வாழ்வு கிடைக்கும்
மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம். அன்றைய தினம் சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு சாப்பிட தரவேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications