கார்த்திகையில் தட்டி எடுக்கப்போகும் மழை.. புயல் வெள்ள அபாயம்.. உஷார் மக்களே.. பஞ்சாங்கம் ரெட் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்தில் எங்கும் பலத்த மழை பெய்யும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எந்த நாட்களில் எங்கெங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் தமிழ் பஞ்சாங்கமும் எந்தெந்த ஊர்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மழையோ புயலோ வானிலை ஆய்வு மையம் கணித்து சொல்லும் முன்பாகவே தமிழ் பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டிருக்கும். எந்த நாட்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். எப்போது புயல் வரும்.. எப்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எங்கேங்கு வெள்ளம் வரும் என்றெல்லாம் தமிழ் பஞ்சாங்கத்தில் முன்னோர்கள் கணித்து எழுதி வைத்திருக்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் பல மாவட்டங்களில் அடை மழை தொடங்கி விட்டது. நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தற்போதுதான் தீவிரமடையத் தொடங்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புயல்: ஐப்பசியில் அடை மழை என்பது போல மாத இறுதியில் விடாமல் கொட்டி வருகிறது கனமழை. கார்த்திகை மாதம் பிறக்க இன்னும் சில நாட்கள் உள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி ஐப்பசி 30ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே புதிய புயல் உருவாகும் என்று சோபகிருது வருஷத்திய தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
மதுரையில் கனமழை: கார்த்திகை மாதத்தில் நவம்பர் 19ஆம் தேதி மதுரையில் கனமழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. கடந்த 1 மாத காலமாகவே மதுரையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வெள்ள அபாயம் உண்டு என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. கடுமையான புயல் வீசக்கூடும் எனவும் தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

வட தமிழ்நாட்டில் மழை: திருவாரூர் கிழக்கே உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழ்நாட்டில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 24ஆம் தேதி சென்னையில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தீப திருநாளில் பெய்யும் மழை: நவம்பர் 26ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் சேலம், கோவை, கோபி, கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications