குரு பெயர்ச்சி பலன் 2024: சித்திரைக்குப் பின் கோடி கோடியாக தரப்போகும் குரு பகவான்
சென்னை: 2023ஆம் ஆண்டு சில நாட்களில் முடியப்போகிறது. 2024ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நவ கிரங்களில் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி மட்டுமே சித்திரை மாதம் நிகழப்போகிறது. சித்திரை மாதம் முதல் மிதுனம், கடகம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு பகவான் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார் என்று பார்க்கலாம்.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் சித்திரை மாதம் முதல் உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவமான விரையம், மோட்சம், வெளிநாட்டு பயணம், சொந்த வீடு, தூக்கம், போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வரப்போகிறார். நிறைய பண வருமானம் வரும். சுப விரையங்களும் கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டின் மீது விழுகிறது. நாலாம் பாவம் சுக ஸ்தானம். வீடு, மனை, தாயார், வாகன சுகம் ஆகியவற்றை குரு பகவான் பார்ப்பதால் வீடு, மனை, வாங்கும் யோகம் அமையும். வண்டி வாகனம் மாற்றம் வரும். வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தை குரு பார்க்கப் போவதால் கடந்த காலங்களில் அஷ்டம சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியமால் தடுமாறி தலைமறைவான உங்களுக்கு கடன்கள் அடைபடும். வருமானம் அதிகரிக்கும். முடங்கிய தொழில்கள் மீண்டு அதிக லாபம் தரும்.
6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு தேடி வரும். இது வரை இருந்த நோய் நொடிகள் நீங்கும். மருத்துவத்திற்காக செலவு செய்தவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். கோர்ட் வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதுவரை கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் இனி நட்பாக மாறுவார்கள்.
உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும். தொழில் வியாபார விஸ்தரிப்பு ஏற்படும். வெளிநாட்டு பயணம் லாபத்தை தரப்போகிறது. நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம் கை கூடி வரப்போகிறது. பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். வியாழக்கிழமை திருச்செந்தூருக்கு சென்று பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சித்திரை மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்கு மாறுகிறார். கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. சித்திரை முதல் சனியில் பார்வையில் இருந்து விலகுகிறார் குரு பகவான். இதுவும் உங்களுக்கு பல வழிகளில் நன்மையை தரப்போகிறது.
குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம், சகாயம், தைரியம், வீரம், முயற்சி ஸ்தானம் என்று பெயர். சித்திரை முதல் உங்களுடைய உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.
உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ பூண்ணிய ஸ்தானம் என்ற பாவத்தை குரு பகவான் பார்வையிடுகிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ஆம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பதவிகள் தேடி வரும் உங்கள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.
சித்திரை முதல் உங்கள் வாழ்க்கை பயணம் தடைகள் இன்றி சீராக இருக்கும். அஷ்டமத்து சனியால் பாதிப்புகள் இருந்தாலும் குரு பகவானால் உங்களுக்கு நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக நடைபெறும். நல்ல வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை தலைமை பொறுப்பு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளால் உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
கஷ்டப்பட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பகவான் பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் இதுநாள் வரை தடைப்பட்ட திருமணம் நடைபெறும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடைபெறும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications