காரடையான் நோன்பு 2020 - கணவனின் உயிரை எமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியின் கதை
இன்று காரடையான் நோன்பு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. சுமங்கலி பெண்கள் விரதமிருந்து புது சரடு கட்டிக்கொண்டு காரஅடை செய்து படையலிட்டு அம்மனை விளக்கேற்றி வழிபட்டனர்.
சென்னை: தமிழகத்தில் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு தீர்க்க சுமங்கலி வரம் வேண்டி திருமணம் ஆன பெண்கள் இருக்கும் விரதமாகும். மனைவி ஒரு மந்திரி என்பார்கள். புத்திசாலித்தனமான பெண் மனைவியாக கிடைத்து விட்டால் அந்த எமனால் கூட கணவன் உயிரை பறித்துக்கொண்டு போக முடியாது என்பதற்கு சத்தியவான் சாவித்திரியின் கதைதான் உதாரணம். இது புராண கதையோ நடந்த கதையோ தெரியாது ஆனால் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே படிக்க படிக்க சுவாரஸ்யமானது. அரண்மனையில் வாழ்ந்த சாவித்திரி சத்தியவானை திருமணம் செய்து கொண்டு எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போது நடந்த சம்பவங்களும், எமன் வந்து சத்தியவானின் உயிரை பறித்துக்கொண்டு போனபோது சாவித்திரி எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டு கணவனின் உயிரை மீட்டாள் என்பதைத்தான் இந்த கதை சொல்கிறது. தீர்க்க சுமங்கலி வரம் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இந்த நாளில் சத்தியவான் சாவித்திரி கதையை படிக்கலாம்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரத்தில் வரும் 'மாசிக்கயிறு பாசிப்படியும்' என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருணத்தில் அல்லது பங்குனிப் பிறப்பு நாளில் இதை அனுஷ்டிப்பது வழக்கம். இந்த நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானது. அம்மனை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள் கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். 'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் அதாவது' உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும்' என்று சொல்லி சரடு கட்டிக் கொண்டனர்.
காரடையான் நோன்பு இருந்தால், கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் இன்றைய தினம் விரதமிருந்து புது சரடு கட்டிக்கொண்டு காரஅடை செய்து படையலிட்டு அம்மனை விளக்கேற்றி வழிபட்டனர். கன்னிப்பெண்கள் மனம் போல் மாங்கல்யம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வழிபட்டனர்.

சத்யவான் சாவித்ரி கதை
காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதுதான். இதற்கு சத்யவான் சாவித்திரியின் கதையை கூறுகின்றனர். சாவித்திரி என்ற ராஜகுமாரி சத்யவானை மீது காதல் கொண்டாள். அவனையே திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது தந்தையிடம் தனது விருப்பத்தை கூறினாள். அப்போது அங்கே வந்த நாரதர், இன்னும் ஒரு வருடத்தில் சத்தியவான் மரணம் அடைவான் என்ற அதிர்ச்சியான தகவலைக் கூறி எச்சரித்தார். ஆனால் சாவித்திரி தனது நிலையில் மிக உறுதியாக இருந்ததாள். மகளின் பிடிவாதத்தைப் பார்த்த அரசர், சத்யவானுக்கு சாவித்திரியை திருமணம் செய்துகொடுத்தார்.

சாவித்திரி விரதம்
சத்தியவானை கரம் பிடித்த சாவித்திரி அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தாள். மாளிகையை விட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக் கண்டாள். தன் கணவனின் உயிரைக் காக்க பார்வதி மேற்கொண்ட விரதத்தை மேற்கொண்டாள் சாவித்திரி. ஏழ்மையான நிலையிலும் தனக்கு கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி, அதில் காராமணியும் சேர்த்து அடை போல் தட்டி வெண்ணெய்யுடன் நைவேத்தியம் செய்தாள். பின் மஞ்சள் சரடினை சுமங்கலியாக இருக்க பிரார்த்தித்து அணிந்து கொண்டாள்.

பறிபோன உயிர்
ஒருநாள் சத்தியவான் விறகு வெட்டும்போது பாம்பின் ரூபமாக எமன் வந்தான். அவனைக் கொட்டினான். தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத் தாங்கிப் பிடித்தாள். கற்பின் வலிமையால், எமனும் அவள் கண்ணில் பட்டான். அவன் உயிரைக் கொடுக்கும்படி வாதிட்டாள். கதறி அழுதாள். சத்தியவான் உயிரைக்கேட்டு எமனை பின் தொடர்ந்து சென்றார்.

வரம் கேட்ட சாவித்திரி
சாவித்திரியின் கண்ணீர் எமனின் மனதை நெகிழ வைத்தது. உடனே சாவித்திரியிடம், 'நான் என் கடமையைத் தான் செய்கிறேன். அவன் உயிரைத் தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றான். தனது புத்தியை உபயோகித்த சாவித்திரி, எமராஜனே என் வம்சம் வாழையடியாகத் தழைத்து வளரவேண்டும் என்றாள். 'சரி அப்படியே ஆகட்டும் ' என்று வரமளித்தார் எமதர்மன்!.

புத்திசாலி சாவித்திரி
உங்கள் வரத்தின்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித் தழைத்து ஓங்க முடியும் என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க, வேறு வழியில்லாமல் சத்தியவானின் உயிரைத் திரும்பிக் கொடுத்தார் எமதருமன். சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் எமனையும் வென்று தன் கணவனின் உயிரையும் காத்தது. காரடையான் நோன்பு தினமான இன்று சுமங்கலி பெண்கள் விரதமிருந்து புது சரடு கட்டிக்கொண்டு காரஅடை செய்து வழிபடுவதோடு சத்தியாவன் சாவித்திரியின் கதையை படிக்கலாம்.












Click it and Unblock the Notifications