For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 5 #Margazhi,#Thiruppaavai

Google Oneindia Tamil News

திருப்பாவை பாடல் - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

Margazhi Month Pooja songs Tirupavai, Tiruvempavai part 5

பாடல் விளக்கம்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன் கண்ணன். இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் தழும்பு ஏற்பட்டது. தாமோதரன் என்ற பெயரை தாங்கிய கண்ணபிரானைத், தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது நற்குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், முன்னர் நாம் அறிந்து செய்த பாவங்களும், இனிமேல் நாம் அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் ! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

திருவெம்பாவை பாடல் - 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்:

திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும் தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள். ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான். இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர். ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார். மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை. அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது. கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.

ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார். அப்படி சிவபெருமானின் அடி முடியை யாராலும் அறிய முடியாது... பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய்.

வாசனைத் திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறக்கூடிய இனிப்பான உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! நம்மால் மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவரை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவசிவ" என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலைப் பெண்கள்.

ஆணவ மலத்தில் கட்டுண்ட மனம், இறைவனைப் பற்றி சிறிதளவு நினைக்கும்பொதே, தான் முழுதும் உணர்ந்து விட்டதாக நம்மை ஏமாற்றும். இந்த மாயையில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அவன் ஆட்கொள்வதற்காக, நம்மை மேலும் மேலும் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பாடல் மூலம் உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

English summary
Margazhi month arrived Thirupavai and Thiruvembavai has begun in the Siva and Vishnu temples all over Tamial Nadu. here is the song of Tirupavai and Tiruvempavai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X