சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி ஆட்டம் ஆரம்பம்.. இரண்டரை ஆண்டுக்கு வாய்ப்பூட்டு யாருக்கு?
சென்னை: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி டிசம்பர் மாதமே நிகழ உள்ளது. திருநள்ளாறு ஆலயத்தில் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரைசனி முடிகிறது. யாருக்கெல்லாம் ஏழரை சனி தொடங்குகிறது என்று பார்க்கலாம். ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது. நல்லவர்களுக்கு அவரே அள்ளியும் கொடுப்பார். அவர் நீதிமான் என்பதால் ஆணவக்காரர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். எனவேதான் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை. தசாபுத்திகளும் சரியாக இருந்தால் கிரகங்களின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் யாரையும் பாதிக்காது.

சனி பகவான் தற்போது கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை ஆண்டு காலமாக சனியின் பிடியில் சிக்கியிருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. என்னதான் ஏழரை சனி காலம் என்றாலும் சனிபகவான் அவருடைய சொந்த வீடான கும்பம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமும், சில ராசிக்காரர்களுக்கு சச மகா யோகமும் கை கூடி வரப்போகிறது.
கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்பம் ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்மம் ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. பொது இடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு: கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. இனி புதிய வேலை கிடைக்கும் வருமானம் பெருகும். குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். பாத சனி விலகுவதால் கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பல ஆண்டுகாலமாக பணம் வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடுவதால் திருநாள்ளாறு போய் நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை சந்தோஷமாக வழிபட்டு வாருங்கள்.
மகரம்: 2024ஆம் ஆண்டு முதல் தலையில் அமர்ந்திருந்த சனி ராசியை விட்டும் கேதுவை விட்டும் விலகுவதால் நன்மை. ராசி அதிபதி சனி பகவான் இரண்டாம் வீட்டில் அமர்கிறார். இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். ஏழரை சனி இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்: இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். உங்க ராசி நாதன் சனி உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். பாதகங்களை விட சாதகங்களே அதிகம். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும். 30 வயதை கடந்தவர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

மீனம்: சனி பகவான் 12 ஆம் வீட்டில் விரைய சனியாக தொடர்கிறார். சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. நோய்கள் எட்டிப்பார்க்கும் சனி பகவான் மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். விபரீத ராஜயோகத்தையும் தருவார் சனி பகவான். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும். 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. வீட்டிலும் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பேச வேண்டாம். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மவுன விரதம் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம்.
தப்பிக்க என்ன செய்யலாம்: ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி பெயர்ச்சி காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுபது நல்லது. சனி பகவானை சரணடையுங்கள் சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் நினைத்த காரியம் நிறைவேறும். பச்சரிசியை பொடி செய்து ஆலமர விநாயகருக்கு கோலமிடுங்கள். காகத்திற்கு எள் சேர்த்து தயிர் சாதம் வைப்பது சனியால் ஏற்பட்ட சங்கடங்களைப் போக்கும்.












Click it and Unblock the Notifications