
சனி பெயர்ச்சி 2023: சனியால் வரப்போகும் சோதனைகள்..சாதனையாக மாற்றப்போகும் ராசிக்காரர் யார்?
மதுரை: ஏழரை சனி முடிந்ததே என்று விருச்சிக ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அர்த்தாஷ்டம சனி வந்திருக்கிறது. அர்த்தாஷ்டம சனி என்றால் நான்காம் வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமரப்போகிறார். நான்காம் வீட்டு அதிபதி சனிபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். அஷ்டமத்து சனி போல அர்த்தாஷ்டம சனியும் சில கஷ்டங்களையும் படிப்பினைகளையும் கொடுக்கத்தான் போகிறது.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். விருச்சிக ராசிக்காரர்களே சனி பகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 4ஆம் அதிபதி. அவர் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் நான்காம் இடத்தில் பயணம் செய்வது சிறப்பு. நிறைய அடிகளும் படிப்பினைகளும், சோதனைகளும் வந்தாலும் அதை சமாளித்து சாதனைகளாக மாற்றுவது உங்களுடைய கைகளில் உள்ளது. சனி பகவான் சஞ்சாரம், பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி பலன் 2023 - புண்ணிய சனி..திடீர் ஜாக்பாட் அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு நான்காம் வீடான கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சிபெற்று அமர்வது சசமகா யோகத்தை தரப்போகிறது. நான்காம் வீட்டில் இருந்து சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடு, பத்தாம் வீடு, உங்கள் ராசியின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். காரியத்தடைகள் வந்து நீங்கும். புது முயற்சிகளில் தடைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு படிப்பினைகளையும் சோதனைகளையும் சனிபகவான் தருவார்.

வேலையில் இடமாற்றம்
சனிபகவான் பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டின் மீது விழுவதால் வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். சமூகத்தில் இதுவரை இருந்து வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும்.

எதிரி, கடன் தொல்லை
ஆறாம் வீட்டில் சனிபகவான் பார்வை கிடைப்பதால் எதிரிகள் பிரச்சினைகள் வந்து நீங்கும். அதிக கடன் வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே போல உடல் ஆரோக்கியத்திலும் சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து போகும். அர்த்தாஷ்டம சனியால் நோய்களும், எதிரிகள் பிரச்சினைகளையும் கொடுக்கும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சனி பார்வையால் சங்கடம்
விருச்சிக ராசியின் மீது சனியின் பார்வை விழுவதால் உங்களுக்கு அடி மேல் அடி விழும் அந்த அடியை நீங்கள் எந்த அளவிற்கு தாங்கப்போகிறீர்கள் என்று சனிபகவான் சோதிக்கப்போகிறார். எவ்வளவோ பார்த்து விட்டோம். ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனியை பார்த்து விட்டோம் இதை தாங்க மாட்டோமா என்று யோசிக்கிறீர்கள். வீடு பராமரிப்பு செலவு செய்வீர்கள். வண்டி வாகன செலவு வைக்கும்.

அனுபவிக்கத் தயாராகுங்கள்
சுக ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அம்மா வழி உறவினர்கள் மூலம் சில பிரச்சினைகள் வந்து செல்லும். அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

பரிகாரம் என்ன?
உங்கள் தசாபுத்தி எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரங்களை செய்வது அவசியம். சனி தோஷ நிவர்த்தி யாகங்களிலும் பங்கேற்கலாம். அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய காலபைரவரை செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.