பணத்திற்கு பஞ்சமில்லை..அரசியல் மாற்றம்..அரசியல்வாதிகளுக்கு கெண்டம்..சோபகிருது பஞ்சாங்கம் கணிப்பு
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் பிறப்பதால் பணத்திற்கு பஞ்சமிருக்காது என சோபகிருது தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே நேரத்தில் அரிசியலில் பல மாற்றங்கள் நிகழும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
சோபகிருது தன்னிற் தொல்லுவதெல்லாம் செழிக்கும்
கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்
உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகுமன்றே யுரை
என சோபகிருது வெண்பாவில் கூறப்பட்டுள்ளது. இந்த வெண்பாவின் பொருளை பார்த்தால் சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பழம்பெரும் ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் சுபிட்சம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும். உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது பெய்யும் எல்லா நலன்களும் பெற்றும் மக்கள் வாழ்வர் எனவும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். காரியத்தில் வெற்றி பெறுபவர்களாகவும் அழகானவர்களாகவும் அடக்கமானவர்களாகவும் மங்களகரமான காரியங்களை செய்பவர்களாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோபகிருது நவ நாயகர்கள்
சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. ஸஸ்யாதிபதியாக சந்திரன், ரஸாதிபதியாக புதன்,நீரஸாதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகின்றனர். சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ரஸாதிபதியாகவும் வருவதனால் மத்திய, மாநில அரசுகளினால் நாட்டில் கல்வி கலைகள் செழிக்கும்.

மழையும் புயலும்
திரை கலைஞர்கள் ஏற்றம் காண்பார்கள். காமெடி நடிகர்கள் நன்கு வளர்ச்சியடைவார்கள். பச்சை நிற பயிர்கள் அபிவிருத்தி அடையும்.தேவையான அளவு மழை பொழியும். ஜோதிடத்துறை, புள்ளியியல் துறை,வணிகவியல் துறை நன்கு வளர்ச்சியடையும். இந்த ஆண்டு 4 புயல் சின்னங்கள் உண்டு. கடலோர மாவட்டங்கள் புயலினால் சேதமடையும். உப்பு உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் மருத்துவ துறையில் முடக்கம் ஏற்படும். உயிர்காக்கும் மூலிகைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும்.

நீர்வளம் பெருகும்
மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் காணும். விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், சுபிட்சத்துடனும் வாழ்வார்கள். பட்டு சேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.

மக்கள் சுபிட்சம்
சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் நாட்டு எல்லையில் இருக்கும் போர் பதற்றம் விலகும். அண்டை நாடுகளுடனான பகை விலகி நேசக்கரம் நீட்டுவார்கள். நாட்டில் சமரச சன்மார்க்க நெறி வளர்ச்சியடையும். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள். நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கும்.
ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சந்திரன் வருவதால் மக்கள் சுகபோகமாக வாழ்வார்கள். வெள்ளி விலை ஏறும்.

விவசாயம் செழிக்கும்
நெல் உற்பத்தி அதிகரிக்கும். தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் வளர்ச்சியடையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். கரிசல் மண் பூமியில் விளையும் பயிர்கள் விருத்தியாகும்.

நோய்களும் மருந்தும்
இந்த ஆண்டு கோழிகள் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும். முட்டை விலை உச்சத்தை தொடும். புதிய விஷ காய்ச்சல் பரவும். சித்த வைத்தியமும், ஆயுர்வேதம், பாட்டி வைத்தியம் சிறப்படையும். புதிய வகை வைரஸ் நோய்களால் மனிதர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுவார்கள்.

அரசியல் மாற்றம்
சுக்கிரன் தனது வீட்டில் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். பல பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் தனியார் மயமாக்கும். வனங்களுக்கு சுபிட்சம் ஏற்படும். அறநிலையத்துறையில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்.

கெண்டாதி கெண்டம்
அரசியல் தொடர்புடைய பழம்பெரும் புள்ளிகளுக்கு உடல் நலம் கடுமையாக பதிக்கும். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படலாம். இதனால் கட்சி சரிவை சந்திக்கும். மருத்துவத்துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும். அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்.












Click it and Unblock the Notifications