சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மும்மூர்த்திகளாய் அருள்பாலித்த திருச்செந்தூர் சுப்ரமணியர்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று சண்முகம் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார்.

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று சண்முகம் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தியும், 10 மணிக்கு பச்சை சாத்தியும் அருள்பாலித்த சண்முகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய அம்சமான தேரோட்டம் வரும் 29ஆம் தேதி அதிகாலையில் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் உருகு சட்டசேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலையில் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

சிவப்பு சாத்தி தரிசனம்

சிவப்பு சாத்தி தரிசனம்

மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி, சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சண்முகரை தரிசனம் செய்தனர்.

சண்முகர் தரிசனம்

சண்முகர் தரிசனம்

எட்டாம் திருநாளான செவ்வாய்கிழமை இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். இந்த அரிய கோலத்தினைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

முருகனின் தரிசனம்

முருகனின் தரிசனம்

முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும். சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

மும்மூர்த்திகளின் அருள்

மும்மூர்த்திகளின் அருள்

இன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி நடைபெற்றது. காலையில் பச்சை சாத்தி இறைவன் எழுந்தருளினார். பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு. சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரில் வலம் வரும் சுவாமி அம்பாள்

தேரில் வலம் வரும் சுவாமி அம்பாள்

10ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11ஆம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

12 நாள் திருவிழா நிறைவு

12 நாள் திருவிழா நிறைவு

31ஆம் தேதி சனிக்கிழமை 12ஆம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+