ராகு கேது பெயர்ச்சி 2023: திடீர் ஜாக்பாட்.. வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. அக்டோபர் முதல் அடி தூள்
சென்னை: ராகு பகவான் யோக காரகன்.. கேது பகவான் மோட்ச காரகன் இன்னும் சில மாதங்களில் மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.
மேஷம்: கால புருஷ தத்துவத்தில் முதல் வீடு மேஷ ராசி. செவ்வாய் பகவானின் ஆட்சி மூலத்திரிகோண வீடு, மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராகு, களத்திர கேது. இப்போது அஸ்வினி நட்சத்திரத்தில் ராகுவும் சித்திரை நட்சத்திரத்தில் கேதுவும் பயணம் செய்கின்றன. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள், தொழில் வியாபாரத்தில் சங்கடங்களை சந்தித்து வந்தனர். ராகு கேது ராசியையும் களத்திர ஸ்தானத்தையும் விட்டு விலகுகின்றனர். 12ஆம் வீட்டிற்கு ராகுவும் ஆறாம் வீட்டிற்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.

மகிழ்ச்சியான மனநிலை: மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். மன உளைச்சல் விலகும். உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். தொழிலில் பண விரையம் பண முடக்கம் இருந்தது. கெட்ட கனவுகள், மன குழப்பத்தால் தவித்து வந்தீர்கள். இனி படிப்படியாக பிரச்சினைகள் விலகப்போகிறது. உடல் நல பாதிப்பினால் மருத்துவ செலவுகள் அதிகரித்து வந்தது. எத்தனையோ வீட்டில் கனவன் மனைவி எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டு இருந்தீர்கள். கடனாக கொடுத்த பணம் முடங்கி போனது. பணம் எப்போது வருமோ என்று ஏங்கித்தவித்து வந்தீர்கள்.
வெளியூர் இடமாற்றம்: இனி உங்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மன குழப்பங்கள் நீங்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ராகு யோக காரகன். இனி சுகங்களை உங்களுக்கு தரப்போகிறார். எதிர்பாராத வளர்ச்சி உங்களுக்கு ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரே இரவில் வெற்றியை ருசிப்பீர்கள். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. சொந்த ஊரில் இருப்பவர்கள் வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்வதற்கான யோகம் வரப்போகிறது. தொழில் முதலீடுகளுக்கு தேவையான பணம் வீடு தேடி வரும். நிம்மதியும் சந்தோஷமும் வரப்போகிறது.
மதிப்பு மரியாதை கூடும்: வேலை செய்யும் இடத்திலும் சமுதாயத்திலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து, மரியாதை உயரும். அடிமை வேலை செய்பவர்களுக்கு சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் தேடி வரப்போகிறது. நிதானத்தையும் பொறுமையும் கடைபிடியுங்கள். குருவுடன் இணைந்திருந்த ராகு விலகப்போகிறார். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கப்போகிறது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.
திடீர் ஜாக்பாட்: சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்ரமடைந்து இருப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. பங்குச்சந்தையில் செய்து வைத்திருந்த முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ராகு காலத்தில் சிவப்பு நிற பூக்களை காளி கோவிலுக்கு சென்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றும் வணங்கலாம். ஜாதகத்தில் நாகதோஷ அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த ஜென்ம ராகு, களத்திர கேது காலத்தில் காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று வருவது நல்லது. சர்ப்ப சாந்தி பரிகார யாகம் செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications