மும்பை, பெங்களூர் எல்லாம் வியக்க போகுது.. சென்னையின் அடையாளத்தையே மாற்ற போகும்.. 2 பிக் ப்ராஜெக்ட்
சென்னை: சென்னையின் அடையாளத்தை, மக்கள் பயணம் செய்யும் முறையை முக்கியமாக சரக்கு போக்குவரத்தை அடியோடு மாற்ற போகும் முக்கியமான உயர்மட்ட சாலை திட்டங்கள் 2 தீவிரம் அடைந்து உள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.
திட்டம் 1
சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்க தொடங்கி உள்ளன. இதனால் அங்கே பேரிகேட் மொத்தமாக போடப்பட்டு சாலைகளில் பல இடங்களில் மூடப்பட்டு உள்ளன. அதோடு தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை இன்று முதல் ஒருவழி சாலையாகிறது. இதனால் வரும் நாட்களில் அங்கே பணிகள் முடியும் வரை போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புகள் உள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில் பரபரப்பான அண்ணாசாலையில் 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் பாலங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்தான் நீண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும், மேலும் இது சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். மெட்ரோ சுரங்கத்தை இது பிடிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும். இந்த மேம்பாலம், வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் CMRL இன் தலைமை பொது மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளார். இதில் சுரங்கப்பாதையில் கட்டுமான கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பதற்கான கருவி வேலைகளை நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மேலும் சிஎம்ஆர்எல் மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ.500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை. அண்ணாசாலை செல்ல இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இனி அந்த பாலத்தில் சென்றால் 5 சிக்னல்களில் நிற்க வேண்டியது இல்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் 5 நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடம் ஆகும். பீக் நேரங்களில் இதை விட கூடுதலாக இருக்கும்.
தி நகர் செல்பவர்கள் கீழே சென்று விடுவதால் பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் இருக்காது. சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநில நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சமீபத்தில் ஏலம் கோரியது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ரூ.525 கோடி, இது சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.164 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திட்டம் 2
எதிர்பார்த்ததை விட வேகமாக துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரூட்டில் பல இடங்களில் புதிய பில்லர்கள் முழுமையாக நிறுவப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இந்த திட்டத்திற்காக கூவத்தில் தற்போது தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.

துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு பாலத்தின் பணிகளுக்கு இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்டத்தில் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வும் செய்யப்பட்டு உள்ளது. மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஓட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு. முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன. அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் நடந்து வருகிறது.
மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம்
மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. முதல்முனையாக மதுரவாயல் சாலையில் பேரிகேட் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின் அந்த பில்லர்கள் இடிக்கப்படும். இப்போது கூவம் நதியில் பில்லர்கள் கட்டப்படும் நிலையில்.. கூவத்தில் ஆங்காங்கே மணல், மண் கொட்டப்பட்டு உள்ளது.

இதனால் கூவம் நதி ஆங்காங்கே தடுக்கப்பட்டு குறுகி போய் உள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சாட்டிலைட் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதால் கூவம் நதிக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் இதற்காக தற்போது கூவத்தில் குழிகள் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.
பணிகள் தீவிரம்
இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலம் நீளம்
இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே.
அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். சர்வதேச நாடுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.












Click it and Unblock the Notifications