சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயிலும், நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகனங்களும்தான். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம் என்கிறது தற்போதைய கட்டுமான வேகம். ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, மதுரவாயல் - துறைமுகம் என சென்னையின் ரத்த நாளங்களில் அறுவை சிகிச்சை போல மூன்று மெகா பாலத் திட்டங்கள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

chennai flyover

பிளான் 1: ஈசிஆரில் 'மேஜிக்'... 60 நிமிடம் இனி 15 நிமிடம் தான்!

திருவான்மியூர் டூ உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளத்திற்கு ரூ.2,100 கோடியில் அமையவிருக்கும் நான்கு வழி மேம்பாலம் தான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன். இதுதான் தமிழகத்திலேயே மாநில அரசு கட்டும் மிக நீளமான உயர்மட்ட சாலை. மாமல்லபுரம், புதுச்சேரி செல்பவர்களுக்கு இனி டிராஃபிக் தலைவலி இருக்காது.

இதன் ஸ்பெஷாலிட்டியே நிலம் கையகப்படுத்த தேவையில்லை என்பதுதான். சாலை நடுவே தூண்கள் எழும்புவதால் நிலப்பரப்பு அப்படியே இருக்கும். எல்.பி.ரோடு, நீலாங்கரை போன்ற 13 ஜங்ஷன்களில் உள்ள நெரிசலை இது காலி செய்துவிடும். 60 நிமிட பயணத்தை 15 நிமிடமாக சுருக்கப்போகும் இந்த 'மேஜிக்' பாலம், ஓஎம்ஆர் பகுதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். தனியார் பங்களிப்புடன் கட்டப்படுவதால் இதற்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளான் 2: மதுரவாயல் 'டபுள் டெக்கர்' அதிரடி!

ஜெயலலிதா ஆட்சியில் ஈகோ மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் திட்டம், இப்போது அசுர வேகத்தில் உயிர் பெற்றுள்ளது. தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்டும் இடங்களாக இருந்த அந்த அவலநிலை மாறி, இப்போது கூவம் நதியில் புதிய பில்லர்கள் முளைக்கின்றன.

ரூ.5,855 கோடியில் உருவாகும் இது ஒரு 'டபுள் டெக்கர்' பாலம். அதாவது, வடபழனியில் மெட்ரோ பாலம் இருப்பது போல, இங்கே இரண்டு அடுக்குகளுமே வாகனப் போக்குவரத்துக்காக ஒதுக்கப்படும். கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரை 20.6 கி.மீ தூரத்திற்கு அமையும் இந்த பாதையில் 7 என்ட்ரி, 6 எக்சிட் பாயிண்டுகள் இருக்கும். ராணுவ நிலம் பெறுவதில் இருந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருவதால், சென்னை வாசிகள் விரைவில் இந்த 'இன்ஜினியரிங் விந்தையை' கண்கூடாகப் பார்க்கலாம்.

பிளான் 3: அண்ணா சாலையில் 'இரும்பு'

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தூரத்திற்கு அமையவிருக்கும் மேம்பாலம் தான் தமிழகத்தின் காஸ்ட்லி பாலம். கீழே மெட்ரோ சுரங்கம் இருப்பதால், அதற்கு ஒரு சிறு கீறல் கூட விழாமல் மேலாக பாலம் கட்டுவது சவாலான காரியம். அதனால்தான் இதை 'பொறியியல் அதிசயம்' என்கிறார்கள் அதிகாரிகள்.

இங்கே கான்கிரீட் தூண்களுக்கு பதில் இரும்புத் தூண்கள் (Steel Piers) பயன்படுத்தப்படுவதால் பணிகள் 50% முடிந்துவிட்டன. அண்ணா சாலையின் சிக்னல்களில் சிக்கித் தவிக்கும் பயணிகள், இந்தப் பாலம் திறக்கப்பட்டால் வெறும் 10 நிமிடத்தில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டையை அடைந்துவிடலாம்.

இந்த மூன்று திட்டங்களும் முடிவுக்கு வரும்போது, சென்னை உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பைக் கொண்ட நகரமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. சிங்காரச் சென்னை இப்போது 'பறக்கும்' சென்னையாக மாறத் தயாராகிவிட்டது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+