இனி வாலாட்ட முடியாது.. தமிழ்நாட்டிலும் வருகிறது புதிய டோல்கேட் முறை.. வாகன ஓட்டிகள் கவனம்!
சென்னை: 'மல்டி-லேன் ஃப்ரீ-ஃப்ளோ' (MLFF - Multi-Lane Free-Flow) எனப்படும் தடையற்ற சுங்கச்சாவடி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் 'மல்டி-லேன் ஃப்ரீ-ஃப்ளோ' (MLFF - Multi-Lane Free-Flow) எனப்படும் தடையற்ற சுங்கச்சாவடி முறையை நாடு முழுவதும் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த அதிநவீன 'ANPR-FASTag' தொழில்நுட்ப முறையை முதற்கட்டமாக குஜராத் மற்றும் டெல்லி NCR ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பேரியர்களுக்காக (Barriers) இனி நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வாகனங்கள் தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலேயே சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல முடியும். இதற்கான சுங்கக் கட்டணம், வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்டேக் (FASTag) கணக்கிலிருந்து தானியங்கி முறையில் கழிக்கப்படும். அதே வேளையில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களின் எண்களை அதிநவீன ஏஎன்பிஆர் (ANPR - Automatic Number Plate Recognition) கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவற்றுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும்.
விஐபி (VIP) கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
மத்திய அரசின் இந்த புதிய தடையற்ற டோல்கேட் முறையின் மூலம், 'எம்.எல்.ஏ, எம்.பி, பிரதான், சர்பஞ்ச்' போன்ற லேபிள்களைப் பயன்படுத்தி, சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் விஐபி-க்களின் முறைகேடுகள் நாடு முழுவதும் முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. NHAI வழிகாட்டுதல்களின்படி அதிகாரப்பூர்வமாக விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே சுங்க விலக்கு அளிக்கப்படும். மேலும், அந்த வாகனங்கள் அனைத்தும் கண்டிப்பாக NHAI போர்ட்டலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு மாவட்ட ஆட்சியரோ (Collector) அல்லது மக்கள் பிரதிநிதியோ மற்றொரு நபரின் வாகனத்தில் பயணித்தாலும், சுங்கக் கட்டணம் கழிந்ததற்கான குறுஞ்செய்தி (SMS) அந்த வாகனத்தின் உண்மையான உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கே நேரடியாகச் செல்லும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வரும் டிசம்பர் 2026-க்குள் நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட முக்கிய டோல் பூத்களை இந்த தடையற்ற ஃப்ரீ-ஃப்ளோ அமைப்பாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரின் டாங்கியா வாஸ், சிகாரின் அகைப்பூர் மற்றும் ஜெய்ப்பூரின் மனோகர்பூர் ஆகிய சுங்கச்சாவடிகள் இந்த அமைப்பிற்கு மாறத் தயாராகி வருகின்றன. ஜோத்பூரின் டாங்கியா வாஸ் சுங்கச்சாவடியில் ஏற்கனவே 80 சதவீத பேரியர்கள் ஃப்ரீ-ஃப்ளோ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபிட்னஸ், புகைச்சான்றிதழ் இல்லை எனில் இ-நோட்டீஸ்
வாகனத்தில் ஃபாஸ்டேக் இல்லை என்றால், வாகனத்தின் நம்பர் பிளேட்டை அடிப்படையாகக் கொண்டு சுங்கக் கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும். இதற்கான மின்-அறிவிப்பு (E-Notice) வாகன உரிமையாளரின் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த நிலுவைத்தொகையை 72 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் அல்லது வாகனத்தின் 'வாகன்' (VAHAN) போர்டல் சேவைகள் முடக்கப்படும்.
இதனுடன், இந்தச் சாவடியைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் (Fitness) மற்றும் புகைச்சான்றிதழும் (Pollution Certificate) கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் சரிபார்க்கப்படும். இவை இல்லாத பட்சத்தில், வாகன உரிமையாளர்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும். மேலும், 'ஹை-செக்யூரிட்டி நம்பர் பிளேட்' (HSRP) இல்லாத வாகனங்களும் தப்ப முடியாது; அவற்றின் எண்களும் துல்லியமாகப் புகைப்படம் எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து NHAI அதிகாரிகள் கூறுகையில், "முதற்கட்டமாக சுங்கச்சாவடிகள் முழுமையாக ரொக்கமில்லா (Cashless) மையங்களாக மாற்றப்பட்டு, தற்போது ஃப்ரீ-ஃப்ளோவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எரிபொருள் விரயமாவது தடுக்கப்பட்டு, கார்பன் உமிழ்வும் பெருமளவு குறையும்" என்றனர்.
100% ரொக்கப் பரிவர்த்தனைகள் மூடல்
மத்திய அரசு சுங்கச்சாவடிகளை முழுமையாக நவீனமயமாக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் NHAI சுங்கச்சாவடிகளில் 100 சதவீத ரொக்கக் கட்டண வசூல் நிறுத்தப்பட்டு, ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் கழிக்கப்படுகிறது. ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்த அனுமதி உண்டு, ஆனால் அதற்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, அல்வாரின் ஒரு சுங்கச்சாவடியில் காருக்கான கட்டணம் 40 ரூபாய் என்றால், யுபிஐ மூலம் செலுத்தும்போது 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம்
இந்த புதிய ஃப்ரீ-ஃப்ளோ முறையால் சுங்கக் கட்டண வசூல் அதிகரித்து, முறைகேடுகள் குறைந்தாலும், சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1,087 NHAI சுங்கச்சாவடிகளில் சராசரியாக தலா 50 ஊழியர்கள் வீதம் மொத்தம் சுமார் 54,000 பேர் பணியாற்றி வருகின்றனர். புதிய தானியங்கி முறையினால், மனிதத் தேவைகள் குறைக்கப்பட்டு இனி 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள் என்பதால், நாடு முழுவதும் 30,000 முதல் 40,000 பேர் வரை வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 172 சுங்கச்சாவடிகளில் தற்போது பணியாற்றி வரும் சுமார் 8,500 ஊழியர்களும் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications