Chennai: எங்க ஏரியா... வேளச்சேரியின் 1,000 ஆண்டு பழமையான 20 கல்வெட்டுகள்!
சென்னை: சென்னை மாதம் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை வேளச்சேரி பகுதியை பற்றிய வரலாற்றையும் பழமையான கல்வெட்டுகளை பற்றியும் விவரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
20 கல்வெட்டுகள் மூலம் வேளச்சேரி 1,000 ஆண்டுகள் சென்னை நகரம் என்று அறியப்பட்டாலும், 2,000 வருடங்கள் தொன்மையான புலியூர் கோட்டத்தின் (பழைய சென்னை) ஒரு பகுதியாக வேளச்சேரி இருந்துள்ளது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது. வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இருந்தபோதும் வேளச்சேரி ஒரு பழமையான ஊரு. கல்வெட்டுகள் மூலம் வேளச்சேரி 1,000 ஆண்டுகள் பழமையான ஊரு என்று அறியப்பட்டாலும், 2,000 வருடங்கள் தொன்மையான புலியூர்கோட்டத்தின் ஒரு பகுதியாக வேளச்சேரி இருந்துள்ளது.
சென்னையை சேர்ந்த பகுதிகள் பழைய காலத்தில் புலியூர் கொட்டத்தை சார்ந்தவை என்பது வேளச்சேரி கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன.
வேளச்சேரி, கிண்டியிலிருந்து கிழக்குப்புறமாக சில கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த இரு புராதான கோயில்கள் தண்டீஸ்வரம் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் உள்ளது. அதில் தண்டீஸ்வரம் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலின் விமானம் 6.72 மீட்டர் உயரத்தில் நடுத்தர அளவில் உள்ளது. விமானம் கன செவ்வக வடிவத்தில் அமைந்திருப்பதால் ஒவ்வொரு பகுதியிலும் நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் திருமுல்லைவாயில் கோயிலில் அமைகக்ப்பட்டதுபோல் திருவிருவங்கள் இல்லையெனினும் அதன் எளிமையின் காரணமாக அழகாக உள்ளது.
கருவறையின் பெரும்பாலான சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன.
அக்கல்வெட்டுகளில் முதன்மையானது முதலாம் பராந்தகச் சோழனின் மகன் கங்காராதித்யா(10ஆம் நூற்றாண்டு) ( 1911-ல் 306, தெற்கு சுவற்றில் 1911-ல் 315) மத்திய கருவறையின் மேற்கு சுவரில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும்.

மற்ற கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை. (வடக்கு சுவர்) முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. (மேற்கு மற்றும் வடக்கு சுவர்கள்) குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. (வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள்) மற்றவை கடட்டத்தின் தொன்மையை விளக்குவதாக உள்ளன. (302-305 மற்றும் 1911-ல் 307-314) சோழ அரசர் முதலாம் ராஜராஜனை பற்றிய கல்வெட்டுகள் வேளச்சேரி மட்டுமில்லாது சாந்தோம் (மைலாப்பூர்), திருவொற்றியூர், பாடி, புலியூர், பூந்தமல்லி மற்றும் பல்லாவரத்திலும் காணப்படுகிறது.
வேளச்சேரியில் காணப்படும் கல்வெட்டில் வேளச்சேரி என்பது வெளிச்சேரி என்றும் ஜினா சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பதியப்பட்டுள்ள்ளது. இங்குள்ள கடவுள் திரு தண்டீஸ்வர தேவா, திரு தண்டீஸ்வரம் உடையார், திரு தண்டீஸ்வரம் உடைய நாயனார் மற்றும் திரு தண்டீஸ்வரம் உடைய மகாதேவா என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். கல்வெட்டில், இந்த ஊரின் நிர்வாகப் பெயர் சபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பகுதிகளில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழர் (1012 - 1044) பற்றி 25 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் சாந்தோம் (மயிலாப்பூர்), திருவொற்றியூர், திருவான்மியூர், பூந்தமல்லி, திருமுல்லைவாயில், வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ளன.
செல்லியம்மன் கோயில் மிகவும் சிறிய கோயில். அதன் விமானம் தண்டீஸ்வரம் கோயில் விமானத்தின் வடிவமைப்பில் இருந்து மாறுபட்டது என்றாலும் உள்ளடக்கமானது.
இக்கோயிலிலும் முந்தைய கால சோழர் கல்வெட்டுகள் உள்ளன. அக்க்கல்வெட்டில் முதலாம் பராந்தகச் சோழர் மற்றும் பர்த்திவேந்தரவர்மன் பற்றிய குறிப்புகள் தெற்கு சுவரில் உள்ளது. இக்கோயில் சிறியதாக இருப்பதால் பேசும்படியான மண்டபங்களோ தூண்களோ இல்லை. வேளச்சேரியில் ஒருவரை கவர்ந்திழுக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கற்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. அதில் விஷ்ணுவும் அவரது உபநயர்களும் கூரையற்ற வெட்டவெளியில் சாய்ந்திருப்பது அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. அதில் உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள மூன்று உருவங்கள் கிட்டத்தட்ட 1.82 மீட்டர் உயரமுள்ளவை. இந்த உருவங்கள் வேளச்சேரியில் சிதைவுற்ற நிலையில் இருந்த ஒரு கோயிலில் இருந்து கொண்டுவரப்படட்வை என அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.
யோக நரசிம்மர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் உள்ளன. இங்கு அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் மூன்று அடி அளவுள்ள வேதநாரயணாரின் வெண்கல திருவுருவம். இவர் நின்ற நிலையில் நரசிம்மர் கோயிலில் வீற்றிருக்கிறார். பூமிக்கடியில் புதையுண்டிருந்த இவ்வுருவம் ஒரு விபத்தாக 100-110 வருடங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட்டது என கூறப்படுகிறது.
வேளச்சேரி, கோட்டூர் நாட்டின்(1911-ல் 305) ஒரு பகுதியான திருவான்மியூருடன் சேர்ந்தே உள்ளது. கோட்டூர் நாடு, பின்னர் கோட்டூர் என்றழைக்கப்பட்டது.
வேளச்சேரி பிடாரி கோயில்
இங்கு வசிக்கும் பெரும்பாலானோருக்கு இக்கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழமையான சப்த மாதர்கள் அல்லது சப்த கன்னியர் கோயில்களில் ஒன்று என்பது தெரியாது. தண்டீஸ்வரம் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோயில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.
சப்த கன்னியர் வழிபாடு தமிழகத்தில் இருக்கும் தொன்மையான வழிபாடு. இக்கோயில்கள் நூற்றுக்கணக்கில் பிடாரி அம்மன் அல்லது செல்லியம்மன் என்ற பெயரில் உள்ளன. வேளச்சேரியில் உள்ள சப்த மதகோயில் மற்ற கோயில்களை விட சிறப்பு வாய்ந்தது. காரணம்.,
966 CE: இங்கு பர்திவேந்தர வர்மன் குறித்த கல்வெட்டு உள்ளது.( இவர் பல்லவ பேரரசை சாந்தவர் என்றும் வீர பாண்டியர் தலைமையின் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது). சப்த பூஜை செய்ய மாதர்களுக்காக தானம் வழங்கப்டுகின்ற நிலத்திற்கு புலியூர் கோட்டத்திலுள்ள வெளிச்சேரி சபை வரிவிலக்கு அளிக்கிறது.
967 CE: மற்றொரு கல்வெட்டு 967 சி.இ, காலத்தைய ஆதித்ய கரிகாலன் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. இக்கோயிலிலுள்ள அனைத்து உருவங்களும் சோழர் காலத்து சிற்பங்கள் எனக் கூறப்படுகிறது. கிராம தேவதை வழிபாட்டில் 7 கல் வழிபாடு என்பது சப்த மாதர் அல்லது சப்த கன்னியர் வழிபாட்டைக் குறிக்கும். இதனை பிரதிபலிப்பதாக இக்கோயில் உள்ளது. இதில் அதிர்ச்சியுறக்கூடிய விஷயம் என்னவெனில் இக்கோயில் புனரமைக்கப்பட்ட பின்பு அங்கிருந்த விலைமதிப்பில்லாத கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டன.
974 CE: செல்லியம்மன் கோயில் தெற்குச் சுவர்:
புலியூர் கோட்டத்து வெளிச்சேரி சபையார் இவ்வூரிலுள்ள காளா பிடாரி இறைவிக்கு ஒரு நந்தா விளக்குக்கு திரு அமுதுக்கும் வேண்டிப் பயிரிடப்படாத நிலம் (மஞ்சிக்கம்) ஒன்றினை கொடுத்துள்ளனர். (317/1991, ஆட்சி ஆண்டு 4; எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1009 CE: செல்லியம்மன் கோயில் தெற்குச் சுவர்:
(316/1911, பர்திவேந்தர வர்மன் ஆட்சி ஆண்டு 15)
தண்டீஸ்வரம் கோயில் கல்வெட்டுகள்:
962 CE: தண்டீஸ்வரம் கோயில் உண்ணாழிகைத் தெற்குச் சுவர்:
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு வெளிச்சேரி ஊர் நிர்வாகச் சபையான ஆளுங்கணத்து உறுப்பினர் தென்னுர் தேவகுமார கிரமவித்தன் என்பவன் இவ்வூர் தண்டீஸ்வரர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்தான்.(315/1911, சுந்தரசோழன் (956-973 CE) காலம், ஆட்சி ஆண்டு 5; எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
964 CE: தண்டீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்:
சோழநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து ஒன்பதிற்றுவெளி என்னும் ஊரைச் சேர்ந்த இந்திரன் பழிநத்தடிகள் மற்றும் இவன் தம்பி அண்ணாமலை ஆகிய இரு வெள்ளாளர்களும் புலியூர்க் கோட்டத்து வெளிச்சேரி மகாசபையினரிடம் விலை கொடுத்து நிலம் ஒன்றினை வாங்கி வெளிச்சேரி தண்டீஸ்வரர் கோயிலுக்குத் தானமளித்துள்ளனர். (306/1911, சுந்தரசோழன் காலம் (956-973 CE) ஆட்சி ஆண்டு 7; எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
995 CE: தண்டீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்:
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு வெளிச்சேரி புற ஊர்ப் பகுதியான தரமணியில் உள்ள தரமணி மகாதேவர் கோயில் வழிபாட்டுச் செலவினங்களுக்கு சாந்தி விளக்குகள் வைப்பதற்காகவும் சோழ நாட்டு கிழார் கூற்றத்து வைகாவூர் சேரி ஊரைச் சார்ந்த அமுதன் பிச்சன் என்கிற செம்பியன் கிழாநாட்டுக் கோன் என்பவன் தரமணியிலிருந்து நிலம் ஒன்றினை வாங்கி கோயிலுக்குத் தானமளித்துளான் (304/1911, முதலாம் ராசராசன், ஆட்சி ஆண்டு 10; எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1004 CE: தண்டீஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்::
புலியூர் கோட்டத்து வெளிச்சேரி ஆளுங்கணத்து நிர்வாகச் சபை உறுப்பினர் பத்தங்கி சட்ட சதுர்வேதி பட்டன் மகன் நாராயண பட்டன் என்பவன் தண்டீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்தான். (312/1911, முதலாம் ராசராசன் (985-1014 CE), ஆட்சி ஆண்டு 19; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1015 CE: தண்டீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்:
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு பிரமதேயம் வெளிச்சேரி பிரமதேயம் ஆளுங்கணத்து உறுப்பினர் மகாதேவர் பத்தங்கி காளகுமார கிரமவித்தன் என்பவன் இக்கோயில் தண்டீஸ்வரர் தேவர் இறைவனுக்குத் திருநந்தா விளக்கு வைப்பதற்கு ஆடுகள் கொடையளித்துள்ளான். (308/1911, முதலாம் ராஜேந்திரன் (1012-1044 CE) ஆட்சி ஆண்டு 3; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1015 CE: தண்டீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்:
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு பிரமதேயம் வெளிச்சேரி தண்டீஸ்வரர் மகாதேவர் கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு விசாலி நாட்டுப் பிரிவைச் சார்ந்த ஆற்றூர் நாராயணன் என்பவன் 90 ஆடுகள் தானமளித்துள்ளான் (309/1911, முதலாம் ராஜேந்திரன் (1012-1044 CE) ஆட்சி ஆண்டு 3; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1018 CE: தண்டீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்::
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு பிரமதேயம் வெளிச்சேரி ஆளுங்கணத்து உறுப்பினர் கண்ணபிரான் சர்வாதித்தர் மனைவி நங்கைச்சானி என்னும் பிராமணப் பெண் ஒருத்தி தண்டீஸ்வரமுடைய மகாதேவர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 90 ஆடுகள் தானமளித்துள்ளாள்.
(302/1911, முதலாம் ராஜேந்திரன் (1012-1044 CE) ஆட்சி ஆண்டு 6; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1022 CE: தண்டீஸ்வர கோயில் உண்ணாழிகையின் மேற்கு மற்றும் தெற்கு முப்படைக் குமுதம்:
புலியூர் கோட்டத்துக் கோட்டூர் நாட்டு பிரமதேயம் வெளிச்சேரி ஆளுங்கணத்தார் தண்டீஸ்வரமுடைய மகாதேவர் கோயிலுக்கு 1500 குழி நிலத்தினை 300 காசுகள் பெற்றுக்கொண்டு வரிநீக்கி விற்று கொடுத்துள்ளனர் இக்கல்வெட்டின் இறுதியில் ஆளுங்கணத்து உறுப்பினர் பத்தங்கி நரசிங்க கிராமவித்தன் என்பவன் இக்கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க 23 காசுகள் கொடுத்துள்ளச் செய்தி காணப்படுகிறது. (305/1911) முதலாம் ராஜேந்திரன் (1012-1044 CE) ஆட்சி ஆண்டு 10; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1153 CE: தண்டீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்:
புலியூர் கோட்டம் என்கிற குலோத்துங்கசோழ வளநாட்டு கோட்டூர் நாட்டுப் பிரிவிலுள்ள வெளிச்சேரி எனும் சினசிந்தாமணிச் சதுர்வேதிமங்களத்து நாயனார் கோயிலில் இவ்வூர் கரணத்தான் திருச்சிற்றம்பலமுடையார் என்பவன் இரண்டு சக்தி விளக்குகள் எரிக்க ஏற்பாடுச் செய்துள்ளான்.
(307/1911 இரண்டாம் ராசராசன் , ஆட்சி ஆண்டு 7; )
1203 CE: தண்டீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்:
ஜெய்னகொண்டசோழ மண்டலத்துக்கு குலோத்துங்கசோழ வடநாட்டுத் திருவான்மியூர் ஊரிலிருந்த திருநாவுக்கரசர் மடத்த்தினை நிர்வதிப்பதற்காக வெளிச்சேரி எனும் ஜினசிந்தாமணி சதுர்வேதி மங்கலத்தில் இருந்து 10 வேலி நிலத்தினை சேதிராய தேவர் என்பவர் வழங்கியுள்ளார்.
(303/1911 மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி ஆண்டு 25; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1203 CE: தண்டீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்:
பத்தங்கி சட்ட பட்டன் என்பவரிடமிருந்து ஐயன்கண்டசோழமண்டலத்து புலியூர் கோட்டத்து வெளிச்சேரி எனும் ஜீனசிந்தாமணிச் சதுர்வேதிமங்களத்து மகாதேவர் கோயிலில் இரண்டு சந்தி விளக்கு எரிப்பதற்குப் பொருள் பெற்றுக்கொண்டு விளக்கு எரிப்பதாக இக்கோயில் சிவபிராமணர்கள் உடன்படிக்கைச் செய்துக் கொடுத்துள்ளனர். (310/1911 மூன்றாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு 25; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1238 CE: தண்டீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்
சோழமண்டலத்து அரியாதணன் என்பவன் வெளிச்சேரி என்கிற ஜீனசிந்தாமணிச் சதுர்வேதிமங்களத்து உடையார் தண்டீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் எனும் இவ்வூர் சீகரணத்தான் உத்தமப்பிரியன் ஆழ்வார்பிள்ளை என்பவன் எடுப்பித்தத் திருச்சிற்றம்பலமுடையார் திருமேனிக்கு ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒரு மாடைப் பொன் அளித்துள்ளான். ஒரு மாடைப் பொன் அன்று வழக்கத்திலுருந்த புதுக்காசு 450 காசுகளாக மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. (313/1911, மூன்றாம் ராசராசன், ஆட்சி ஆண்டு 22; (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1261 CE: தண்டீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்:
சோழமண்டலத்து கீரங்குடி ஊரைச் சார்ந்த மருத்துடையான் சோறன் அரியாதணன் என்பவன் வெளிச்சேரி என்கிற ஜீனசிந்தாமணிச் சதுர்வேதிமங்களத்து உடையார் தண்டீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் ஏழு நாழிகை நேரம் ஏரிய சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு உண்ணாழிகைச் சபையாரிடம் ஒன்பது பணம் அளித்துள்ளான் (314/1911 கோப்பெருஞ்சிங்கன் ஆட்சி ஆண்டு 18; எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
1009 CE: வேதநாராயணப் பெருமாள் கோயிலில் மேல் விதானம்
பல்வேறு ஊர்களிலுள்ள நிலத்தின் மீதான வருவாய் மற்றும் வரிகளை இக்கோயிலுக்கு சர்வமானியமாக ராசராசன் வழங்கிய ஆணை. (முதலாம் ராசராசன் (985-1014 CE), ஆட்சி ஆண்டு 24. (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்)
முதலாம் ராஜேந்திரன் (985-1014 CE) -- வேதநாராயணப் பெருமாள் கோயிலில் மேல் விதானம்:
இது துண்டுக் கல்வெட்டாக உள்ளது. முதலாம் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியின் சில பகுதிகள் காணப்படுகின்றன. ஆவூர் திருமேற்றளி கோயிலில் விளக்கெரிக்க இவ்வூரைச் சார்ந்த நங்கை சாணி என்பவள் ஆடு தானமளித்தாள். (எழுத்து: கிரந்தம் மற்றும் தமிழ்).
கல்வெட்டுகளே 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றால் வேளச்சேரி ஊரு எவ்வளவு பழமையானதாக இருக்கு வேண்டும்? புலியூர் கோட்டம் என்ற சென்னை எவ்வளவு பழமையானதாக இருக்கு வேண்டும்? புலியூர் கோட்டம் தான் பழைய சென்னை என்பதை வேளச்சேரி கல்வெட்டுகள் தெள்ளந்தெளிவாக உறுதி செய்கின்றன.
தகவல் - கட்டுரை: ஆர். ரங்கராஜ், தலைவர், சென்னை ௨௦௦௦ ப்ளஸ் அறக்கட்டளை.












Click it and Unblock the Notifications