நடிகர் முருகன் திடீரென காலமானார்.. மீம்ஸ்களில் பலருக்கும் பரீட்சையமான முகம்! இவருக்கா இந்த நிலைமை!
சென்னை: திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நடிகர் முருகன் (வின்ஸ்டார் விஜய்) திடீரென மாரடைப்பால் காலமான செய்தி திரைப்பட உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் அமைதியாக தனது பயணத்தை தொடர்ந்துவந்த அவர், திரையில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றினாலும் நினைவில் நிற்கும் முகமாக ரசிகர்களிடம் பிரபலமானவர்.
அவரை பொதுமக்கள் அதிகம் அடையாளம் கண்டுகொண்டது "எப்போதும் ராஜா" திரைப்படத்தின் மூலம் தான். அந்த படத்தில் அவர் நடித்த டபுள் ஆக்சன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. குறுகிய காட்சிகள் என்றாலும் தனித்துவமான உடல் மொழி, இயல்பான நடிப்பு, முகபாவனைகள் ஆகியவற்றால் அவர் நடித்த காட்சிகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டன. பின்னர் பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த "எப்போதும் ராஜா" படம் அவருக்கு ஒரு அடையாளமாகவே இருந்து வந்தது.

சாதாரண பின்னணியில் இருந்து வந்த முருகன், சினிமாவில் வாய்ப்பு பெற பல ஆண்டுகள் போராடியவர் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து, கூட்டக் காட்சிகள், பின்னணி தோற்றங்கள் போன்றவற்றில் நடித்தவர். அதன்பின் மெதுவாக சிறிய டயலாக் ரோல்கள், குணச்சித்திர தோற்றங்கள் என முன்னேறினார். பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களில் கூட ஒரு காட்சி கிடைத்தால் அதற்காக முழு உழைப்பையும் கொடுப்பவர் என்ற பெயர் அவருக்கு இருந்தது.
அவரது நடிப்பின் முக்கிய அம்சம் - காமெடி, சீரியஸ், கிராமத்து மனிதர், நகரத்து சின்ன ரோல் என எந்த வகை வந்தாலும் அதற்கு ஏற்றபடி உடனே மாறிக் கொள்ளும் திறன். பல இயக்குநர்கள் "ஒரு டேக் ஆர்டிஸ்ட்" என்று அவரை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
திரைப்படங்களைத் தாண்டி, அவர் நடித்த சில காட்சிகள் மற்றும் அவரது இயல்பான முகபாவனைகள் கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்களாக வைரலாகி வந்தன. குறிப்பாக அவரது ரியாக்ஷன் ஷாட்கள், ஆச்சரியம், பயம், குழப்பம் போன்ற வெளிப்பாடுகள் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பலருக்கும் அவர் பெயர் தெரியாமல் இருந்தாலும், "அந்த ரியாக்ஷன் கொடுக்கும் அண்ணா" என்று மீம்கள் மூலம் பரிச்சயமான முகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது திடீர் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். "சின்ன கதாபாத்திரம் என்றாலும் அதை உயிரோடு காட்டிய நடிகர்", "எளிமையான மனிதர்", "எப்போதும் சிரித்த முகம்" என்று பலரும் சமூக வலைதளங்களில் அவரை நினைவு கூர்ந்து பதிவுகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications