Kara Review: கர படத்தின் கதை இதுதான்! இந்த இடத்தில் சூப்பர்.. ரசிகர்கள் கருத்து! தனுஷுக்கு கம்பேக்!
சென்னை: தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியான கர படம் (Kara moive Review) குறித்து ரசிகர்களின் கருத்துகளுடன் சேர்த்து, விமர்சகர்களின் அபிப்ராயங்களும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. சமூக உணர்வும், திரில்லரும் கலந்த இந்த படம்-மக்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதில்தான் இப்போது பெரிய விவாதம் நடக்கிறது.

கர படத்தின் கதை
இந்தப் படம் 1990களில் ராமநாதபுரம் மாவட்டத்தை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. மழை இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிக் கடன் சுமை, ஜப்தி பிரச்சனை என இந்த எல்லா நிஜ வாழ்க்கை சிக்கல்களையும் கதையின் அடிப்படையாக வைத்து இயக்குநர் கதை கட்டியுள்ளார். இந்த சூழலில், தனது தந்தையை தங்கள் சொந்த நிலத்தில் புதைக்க முடியாமல் தவிக்கும் மகனாக தனுஷ் வரும் கோணம் கதைக்கு ஒரு வலுவான எமோஷனல் அடித்தளத்தை கொடுக்கிறது.

நடிகர்களின் நடிப்பு
தந்தையாக வரும் கே.எஸ். ரவிக்குமார் கதாபாத்திரம் படத்தின் முக்கிய பலமாக சொல்லப்படுகிறது. அவருக்கும் தனுஷுக்கும் இடையிலான அப்பா-மகன் பாச காட்சிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. கடனில் சிக்கிய விவசாயிகளின் வலியை பிரதிபலிக்கும் அந்த பாத்திரம், படத்திற்கு ஒரு உண்மைத்தன்மையை சேர்க்கிறது.
கர படத்தின் பிளஸ்
கடனை அடைக்க வங்கி கொள்ளையில் ஈடுபடும் தனுஷின் முடிவு தான் படத்தை திரில்லர் பாதைக்கு கொண்டு செல்கிறது. இந்த இடத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு தனது இயல்பான நடிப்பாலும், சின்ன காமெடி டச்சாலும் கவனம் ஈர்த்திருக்கிறார். அதேபோல் வங்கி மேலாளராக வரும் ஜெயராம் கிளைமாக்ஸில் வில்லத்தனத்தை காட்டும் விதமும் பேசப்படுகிறது.
நாயகியாக நடித்துள்ள மமிதா பைஜு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், அவருக்கு திரைக்கதையில் அதிக ஸ்கோப் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இடைவேளைக்குப் பிறகு அவருடைய கேரக்டர் பெரிதாக இல்லாதது பலருக்கும் ஏமாற்றமாக இருந்துள்ளது.
நடிப்பில் தனுஷ் மீண்டும் ஒரு முறை தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. திருட்டு காட்சிகள், போலீசிடம் மாட்டிக்கொள்ளும் தருணங்கள், மருத்துவமனையில் வரும் எமோஷனல் காட்சிகள் எல்லாவற்றிலும் அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். ஆனால் "மாஸ் ஹீரோ" என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு சில இடங்களில் இல்லையே என்ற எண்ணமும் எழுகிறது.

ஜிவி பிரகாஷின் இசை
இசை பற்றி பேசும்போது, ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்த "கண்ணம்மா" பாடல் மனதில் நிற்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. பின்னணி இசை சராசரியாக இருந்தாலும், சில காட்சிகளில் மட்டுமே அது தாக்கத்தை அதிகரிக்கிறது.
படத்தின் பலம் என்னவென்றால் வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட திட்டமிடல் காட்சிகள். தனுஷ் திட்டம் போடும் விதம், அதை போலீஸ் தடுக்கும் விதம் போன்ற விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், அந்த திரில்லுக்கு தேவையான வேகம் முழு படத்திலும் தொடர்ந்து இல்லாதது ஒரு குறையாக பேசப்படுகிறது.
முக்கியமாக, படம் கொஞ்சம் நீளமாக இருக்கிறது என்ற விமர்சனமும் உள்ளது. முதல் பாதியில் சில காட்சிகளை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும், வங்கி தனியாரா அல்லது அரசுடமையா என்ற விஷயங்கள் தெளிவாக சொல்லப்படாததும் சிலருக்கு குறையாகத் தோன்றியுள்ளது.
Kara First Review: தனுஷின் “கர” படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்.. அப்போ சம்பவம் இருக்கு!
மொத்தத்தில், "கர" படம் ஒரு நல்ல கரு கொண்ட முயற்சி. விவசாயிகள் பிரச்சனை, அப்பா பாசம், கடன் சுமை போன்ற முக்கிய விஷயங்களை பேசுகிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு கமர்ஷியல் திரில்லராக அது முழுமையாக திருப்தி அளிக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
இது ஒரு "ஸ்லோ-பர்ன்" உணர்ச்சி படம் அதை அந்த கோணத்தில் பார்த்தால் பிடிக்கும். ஆனால் வேகமான, மாஸ் என்டர்டெயின்மென்ட் எதிர்பார்த்தால் சற்று குறைவாக உணரப்படலாம்.













Click it and Unblock the Notifications