யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. பாடகி ஜானகி வாழ்க்கையில் நடந்த சோகம்! ஆதரவுக்கு வரும் ரசிகர்கள்
சென்னை: (S Janaki Murali Krishna) இந்திய திரையிசையில் பல தலைமுறைகளின் வாழ்க்கையோடு கலந்த குரல் எஸ். ஜானகி. பலரின் சோகங்களை தனது இனிமையான குரலால் மறக்க வைத்த அவர் குடும்பத்தில், இப்போது ஒரு பெரிய துயரம் நடந்திருக்கிறது.
பின்னணி பாடகி ஜானகிக்கு ஒரே ஒரு மகன். அவர்தான் முரளி கிருஷ்ணா. 65 வயதான முரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இந்த செய்தி, ஜானகிக்கு மிகப்பெரிய இடியாக இறங்கியுள்ளது.

கணவரை இழந்த பிறகு, பாடகி ஜானகி தனி தாயாக இருந்து மகனை வளர்த்து வந்தார். மேடைகளில் எவ்வளவு பெரிய பாடகியாக இருந்தாலும், வீட்டில் அவர் ஒரு சாதாரண அம்மாதான். பல பேட்டிகளில், "என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என் மகன்" என்று ஜானகி அம்மா சொல்லியிருக்கிறார்.
முரளி கிருஷ்ணா திரைத்துறையில் ஆர்வம் கொண்டவர். சில தெலுங்கு படங்களில் நடித்தும் இருந்தார். பின்னர் பரதநாட்டிய கலைஞர் உமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்தில் முடிந்தது.
அதன்பிறகு, முரளி தனது தாயான ஜானகியுடனேயே வாழ்ந்து வந்தார். அம்மாவை கவனிப்பதும், உடன் இருப்பதும் அவரது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஜானகி அம்மாவும், "மகன் அருகில் இருப்பதால் தான் மன நிம்மதியாக இருக்கிறது" என்று சில நேரங்களில் கூறியிருக்கிறார். சில வருடங்களாக அவர் சினிமாவில் பாட்டு பாடவில்லை தொடர்ந்து வீட்டில் தான் இருந்து வருகிறார்.

அதுபோல சில மாதங்களுக்கு முன்பு கூட ஜானகி அம்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்தது. அப்போது அவருடைய மகன் தான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அதுபோல இது சில ஜானகி உடல்நிலை சரியில்லாமல் போன போதும் துணையாக இருந்து அவரை கவனித்து மீண்டு வர வைத்ததும் முரளி கிருஷ்ணா தான்.
இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு காரணமாக முரளி கிருஷ்ணா உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை மைசூரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
பலருக்கு வாழ்க்கையின் வலியை மறக்க உதவிய ஜானகியின் குரல், இப்போது அவரது சொந்த வாழ்க்கையில் எழுந்த இந்த துயரத்தை எப்படி தாங்கப்போகிறார் என்பதே அனைவரின் கவலையாக உள்ளது.
இந்த வயதில், ஒரே மகனை இழந்துள்ள ஜானகி அம்மாவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துவருகிறார்கள்.
பலருடைய சோகங்களுக்கு மருந்தாக இருந்த ஜானகி அம்மாவின் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்ட இந்த இழப்பில் இருந்து அவர் மனதளவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications