• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்றிக் காய்ச்சல் வராமல் எப்படி தடுக்கலாம்?

By Siva
|

Swine Flu
- புன்னியாமீன்

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த பன்றிக் காய்ச்சல், கடந்த வாரம் தீவிரமடைந்தது. ஒரு வாரத்தில் சென்னை, திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சிறுமி உட்பட 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 11 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி( 75) பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலை உணர குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாததால் சளி, இருமல் இருந்தாலே பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என அச்சப்படும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது...

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விஷயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.

நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு(swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி உயிரிழந்தார். அதே ஆண்டு ஜூன் 11ம் தேதி அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது ஏ இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா ஏ, இன்புளுயன்சா பி மற்றும் இன்புளுயன்சா சி என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா ஏவால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா சி ஆல் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின் மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.

பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918ல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய 'எசுப்பானிய ஃப்ளூ" எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ம் ஆண்டில் ஏற்பட்ட 'எசுப்பானிய ஃப்ளூ" காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயன்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை 'மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

நோயின் அறிகுறிகள்:

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது,

* தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல், விறைப்பு, தசைநார் வலி, இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு

* தலை சுற்றல் / மயக்கம்

* உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி

* இடைவிடாத காய்ச்சல் (100 F க்கு மேல்),

* வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல்

குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல் (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கிக் கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம்.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும்போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும்போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்கலாம். நன்கு ஓய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும். இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்:

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, வயிற்றோட்டம் ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் சளிகோர்த்துக் கொள்வதால் மூச்சுத்திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகலாம்.

இது மட்டுமன்றி ஆஸ்துமா போன்ற சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி(HIV) மற்றும் நீரிழிவு முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைகளை விரிவாக ஆராயும்போது பன்றிக் காய்ச்சல் எனும் கொள்ளை நோய் ஒருசில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்சினையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ நிறுவனங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை வைத்திய நிலையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமி ஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை:

பன்றிக் காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்' / "oselitamivir (Tamiflu (r)" 'ஜானமிவிர்' "zanamivir (Reienza (r) ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்துகள் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக் கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்படுவதும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) ஆகிய மருந்து வகைகள் சிகிச்சைக்கு உதவுகின்றன. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

oselitamivir (Tamiflu (r))" டா‌மிபுளு மாத்திரைகளை முறையின்றி பயன்படுத்துவது ஆபத்தானதாகும். பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ளின் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்திவிடுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் வந்ததையடுத்து மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டிருந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். எனவே பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் உட்கொள்ள வேண்டாம் எனவும் உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌ப்படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள் பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம். ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவுவதை பழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 
 
 
English summary
Swine flu is spreading fastly in India now. A 75 year old farmer died of swine flu in Coimbatore while 23 people have got the infection in Tamil Nadu. It is high time for the people to know about the preventive measures of Swine flu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X