இன்னமும் கனவுகளில்
மேக நிழல் கடக்கும் மண் சாலைகளில்
வேர்த்து நடக்கையில்
சவுக்கியமா கேட்டுப்போன
கிழவியின் பெயர் தேடி
நினைவுகளின் காதுகளை
திருகிக்கொண்டிருக்கிறது மூளையின் செல்கள்....
மூக்கொழுகி மேல்சட்டையணியா
என் கிராமத்து பிள்ளைகளை
வித்தியாசமாய் பார்த்த என் மகள்
என்னை கேட்டாள்
நீயும் இப்படியிருந்தாயாவென
ஆமெனக்கூறுவதில்
இழக்கலாம் என் சிறு பிராயம்பற்றிய
அவளின் கற்பனைகளை...
இன்னமும் கனவுகளில்
நான் பட்டாம் பூச்சிகளைத்துரத்திக்கொண்டிருக்கிறேன்
அவைகள் எப்பொதும்போல
உயரி நாவல் மரகிளைகளில் ஒளிந்து கொள்கின்றன
செந்தோட்டி இலைகளை ஆடு தொடா இலைகளை
முடக்கித்தானை இன்னும் சப்பாத்தி,சூரம் பழங்களையும்
அறிமுகப்படுத்தவில்லை மகளுக்கும் மனைவிக்கும்...
என் கிராம நினைவுகளை
ருக்குப்பாட்டிக்கு முன் பின் என்றே பிரிக்கிறேன் நான்
நந்தியாவெட்டை செடிகளும் செம்பருத்திகளும்
பூத்தாலும் காய்ப்பதேயில்லை...
குழந்தையிலேயே விதவையான பாட்டிபோல...
என் மகள் வரைகிறாள் என் வீட்டின்
பழைய சுவர்களில் என் அம்மாவின்
வளைந்த விரல்களை அவைகள் சுவாசம்பெற்று
என் கன்னங்களை தடவிப்போனது...












Click it and Unblock the Notifications