இந்திய கூட்டாட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறதா புதிய நாடாளுமன்றத்தின் 888 எம்.பிக்கள் இருக்கை?
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 888 எம்.பிக்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குப் பின்னர் லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யக் கூடியதாக இது இருந்தாலும் கூட்டாட்சி முறைக்கு சவால்விடக் கூடியதுதான் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டின் லோக்சபாவில் மொத்தம் 545 எம்.பிக்கள். இவர்களில் 2 பேர் ஆங்கிலோ இந்திய பிரதிநிதிகள். எஞ்சிய 543 எம்.பி.க்களை தேர்வு செய்யவே நாட்டின் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த 543-ல் பழங்குடிகளுக்கான இடங்கள் 41; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்கள் 79.

தற்போது புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கூடுதல் எண்ணிக்கையில் எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது லோக்சபாவில் இனி 888 எம்.பிக்கள் அமரலாம்.
தற்போதைய லோக்சபா எம்பிக்கள் மொத்த எண்ணிக்கை 545. லோக்சபாவில் எப்போது 888 எம்.பிக்கள் என்கிற எண்ணிக்கை அதிகரிக்கும்? தென்னிந்தியா, வட இந்தியா மாநிலங்களுக்கான எம்.பிக்கள் எண்ணிக்கையில் அதிக வேறுபாடு இருக்குமா? என்பது உள்ளிட்டவைதான் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் 2026-ம் ஆண்டு வரை எம்.பிக்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, அரசியல் சாசன திருத்தம் செய்தது. இதனால் 2026-ம் ஆண்டு வரை இதே எம்.பிக்கள் எண்ணிக்கைதான் இருக்கப் போகிறது. 2026-ம் ஆண்டுக்குப் பின்னரே எம்.பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் உருவாகும்.
பொதுவாக மக்கள் தொகை அடிப்படையில்தான் எம்பிக்கள் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை. இதனால் குடும்ப கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முழு வீச்சில் வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கின்றன. ஆனால் வட இந்திய மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. ஆகையால் மக்கள் தொகை அடிப்படையில் எம்.பிக்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் போது தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் மிக மோசமாக குறைந்து போய் இந்தியாவின் கூட்டாட்சி முறையே பெரும் கேள்விக்குள்ளாகி விடும் அபாயம் உள்ளது. இதனை அடிப்படையாக வைத்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
உதாரணமாக 1962-ல் தமிழ்நாட்டுக்கான லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 41. மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால் தமிழ்நாட்டுக்கான லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போது 39 ஆக குறைந்துள்ளது. அதாவது 1967-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கான எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் குறையும் போது நலத்திட்டங்களுக்கான எம்.பி.க்கள் மூலமான நிதியும் கணிசமான பாதிப்புக்குள்ளாகிறது.
இன்னொரு பக்கம், அதே மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவைகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம்; ஆகையால் அம்மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளும் அதிகம்; அதனால் நலத்திட்டங்களுக்கான எம்பிக்கள் நிதியும் அதிகம்.
இப்படி மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் பிரதிநிதித்துவம், நிதி இழப்பை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குவதானே முறையானது என்பது நியாயமான வாதமாகவும் முன்வைக்கப்படுகிறது. இப்படியான ஒரு முரண்பாடுதான் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது விவாத நிலையில் இருக்கும் இந்த விவகாரம் 2026-க்குப் பின் பெரும் பூகம்பத்தையே இந்திய கூட்டாட்சி முறையில் ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நமது நாட்டின் மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது லோக்சபா தொகுதி எம்.பிக்கள் எண்ணிக்கை 545. தற்போது மக்கள் தொகை 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் 1,000 எம்.பிக்கள் இருக்க வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜி, நாட்டின் ஜனாதிபதியாக இருந்த போது இத்தகைய பரிந்துரையை முன்வைத்திருந்தார்.
2026-ம் ஆண்டுக்கு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் உத்தேசமாக லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை இப்படி இருக்கலாம் என்கிற ஒரு கருத்து பேசுபொருளாக இருக்கிறது.
அதாவது
உ.பி, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் 222 எம்.பிக்கள்
மேற்கு வங்கம்- 60
மகாராஷ்டிரா 76
குஜராத் 43
தென்னிந்திய மாநிலங்கள் 165
இதர மாநிலங்கள் அனைத்தும் 282 என்கிற வகையில் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரப்பிரதேசமானது 143; பீகார் மாநிலம் 79 எம்.பிக்களைக் கொண்டதாக உருமாறும். தமிழ்நாட்டில் 39 என்பது 49 ஆக மட்டும் மாறும். கேரளாவில் அதே 20 தொகுதிகளே நீடிக்கும். பீகாருக்கு தற்போது 40 எம்.பிக்கள் என்ற நிலை மாறி இரு மடங்காக உயரும். உ.பிக்கு தற்போது 80 எம்.பிக்கள் நிலையும் இரு மடங்காக அதிகரிக்கும். ராஜஸ்தானும் கூட 25-ல் இருந்து 50 எம்.பிக்களைப் பெறக் கூடும என்கிறது ஒரு கணக்கு.
இப்படியான ஒரு நிலைமை உருவானால் நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது கேள்விக்குறியாக- கேலிக்குறியதாகிவிடும். உ.பி, பீகார் எம்.பிக்கள் நினைப்பதுதான் இந்தியாவின் சட்டமாகிவிடும். தென்னிந்திய மாநில மக்கள், வட இந்தியாவுக்கு கீழ்படிந்தவர்களாக ஒடுக்கப்படுகிறவர்களாக உருமாறும் நிலைமை உருவாகும். இது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு மிகப் பெரும் சவாலாகவே உருவெடுக்கப் போகும் எனவும் எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் 2026-ம் ஆண்டு 888 எம்.பிக்களை உருவாக்கும் வகையிலான தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கொண்டுவரவே அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் சமூக பொருளாதார ரீதியாக தேக்கம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மிக மோசமான பாதிப்புகளை தேக்க நிலையை சந்திக்கக் கூடும். இது ஜனநாயகத்தன்மையை உலுக்கி எடுக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதும் அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை.












Click it and Unblock the Notifications