திமுக ஆட்சியும் பிரிவினை கோஷமும்! பா. கிருஷ்ணன்
"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி",
"உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் கைகொடுப்போம்"
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் அமையும் போதெல்லாம் இந்த இரு கோஷங்களும் உயிர்ப்போடு உலவத் தொடங்கி விடும். இவை இரண்டும் மாநில உரிமைகளைத்தான் வலியுறுத்துகின்றன. என்றாலும், அரசியலாக்கப்படும்போது, பிரிவினைவாதத்தின் சாயல் என்று வருணிக்கப்படுவதுண்டு.
பல ஆண்டுகளுக்கு முன் கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தமிழக மாநிலத்துக்கென்று தனிக்கொடி தேவை என்று கூட குரல் எழுப்பியது. அதைப் போல் பிரிவினை வாதம் தொனிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஒரு சில சமயம் பேசியதும் உண்டு. இத்தகைய காரணங்களால் திமுக பிரிவினைவாத சக்தி என்பதைப் போன்ற பிம்பம் அரசியல் வட்டாரத்தில் வேரூன்றியது.

தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்த சில வாரங்களிலேயே மத்திய அரசு என்பதை "ஒன்றிய அரசு" என ஆளும் தரப்பினர் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அரசியலமைப்புச் சட்டத்தில் Union of India என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டதைச் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இது திமுக அரசுக்கு எதிராக சிக்கலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
இது போதாதென்று, சில தினங்களுக்கு முன் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவரும் திருச்செங்கோடு தொகுதி உறுப்பினருமான ஆர். ஈஸ்வரன், ஆளுநர் உரையின் நிறைவில் ஜெய்ஹிந்த் என்ற சொல் தவிர்க்கப்பட்டதை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், "ஜெய் ஹிந்த் தமிழ்ச் சொல் இல்லை என்பதால் அது தவிர்க்கப்பட்டதை வரவேற்றேன்" என்று கூறியுள்ளார். இது ஏற்புடையதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் இப்படி விளக்கம் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி திமுக மீது பிரிவினைவாதம் என்ற சர்ச்சை அவ்வப்போது நிலவுகிறது. இத்தகைய சிக்கலைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அக்கட்சிக்கு இருக்கிறது. அதே சமயம் பெரும்பாலான தேர்தல்களில் தேசியக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து வந்திருக்கிறது திமுக. இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் தேசிய கட்சியுடன் உறவு வைத்த முதல் மாநிலக் கட்சியும் அதுதான். 1971ம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்தித்தது. (அதற்கு முன் 1970ம் ஆண்டு பஞ்சாபில் அகாலி தளம் பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது.)
தமிழகத்தில் திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டாலும் இரண்டு முறையும் பிரிவினைவாதத்தைக் காரணமாகக் காட்டப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலையை எதிர்த்ததால் ஏற்பட்ட கோபமே 1976ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. ஆனால், கலைத்ததற்கு ஊழல், முறைகேடு ஆகிய காரணங்களையே மத்திய அரசு கூறியது. பின்னர், 1991ல் கலைக்கப்பட்டதற்கு அப்போது அண்ணா திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வற்புறுத்தல் காரணம் என்றாலும், போராளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது என்ற காரணம் சொல்லப்பட்டது.
பொதுவாக மாநிலங்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தாலும் தேசிய நீரோட்டத்தில் இருந்தால்தான் பலவற்றைச் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்தது திமுக அரசுதான். திராவிட நாடு கோரிக்கைக்கு குரல் கொடுத்த அறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றியபோது, "I am a Dravidian Stock" (நான் ஒரு திராவிடன்) என்று பிரகடனம் செய்தாலும், அவரது இயக்கத் தளபதிகளான ஈவெகி சம்பத், இரா செழியன், நாஞ்சில் மனோகரன், பின்னர் முரசொலி மாறன் ஆகியோர் தேசிய முகங்களாகவே திகழ்ந்தனர்.
இவர்களில் 1970ம் ஆண்டுகளில் "மாநில சுயாட்சி", "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?" ஆகிய நூல்களை எழுதிய முரசொலி மாறன் பிற்காலத்தில் புதிய பரிமாணம் அடைந்தார். அக்காலத்தில் திமுகவின் கோஷங்களில், "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், பின்னாளில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், "The States which performance will shine" (நன்றாகச் செயல்படும் மாநிலங்களே பிரகாசிக்கும்) என்று பிரகடனம் செய்தார். அத்துடன், பிரதமர்களை உருவாக்கும் நிலைக்கு திமுக தேசிய முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
இங்கே கவனிக்க வேண்டியது, திமுகவின் பார்வை மாறியது என்பதை விட மத்தியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தால், மாநிலத்துக்குத் தேவையான முன்னேற்றத் திட்டங்களை எளிதாகக் கொண்டு வர இயலும் என திமுக உணர்ந்துள்ளது என்பதுதான்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதானம் தவறாமல் நடப்பவர் என்பதால், உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். "திமுக ஆட்சிக்கு வந்தாலே பிரிவினைவாதம் தலைதூக்கும்" என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று விரும்பலாம். உடைப்பார் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications