அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!
சிவகங்கை: அரசு பள்ளிகள் என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் ஜெனரேஷனாக தற்போதைய தலைமுறை மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ ஒருவர் தனது மகளுக்கு அரசு பள்ளியில் அட்மிஷன் போட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிக்கிறது.
கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசுதான் சரியாக கொடுக்க வேண்டும். கல்வியை கொடுப்பதிலிருந்து விலகிக்கொண்ட எந்த அரசும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அப்பேற்பட்ட அமெரிக்கா கூட, கல்வியை தன் பொறுப்பில்தான் வைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் கல்வி வியாபார பொருளாக மாற்றப்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

தனியார் பள்ளியில் படிப்பதுதான் கௌரவம் என்கிற நிலைக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். ஆனால், அரசு பள்ளிகள் லேசுபட்டவை கிடையாது. தனியார் பள்ளியில் M.Ed படித்திருந்தால், கொஞ்சம் ஆங்கில புலமை கொண்டிருந்தால் போதும், ஆசிரியராக வேலை கிடைத்துவிடும். ஆனால், அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேலைக்கு சேர வேண்டும் எனில், தகுதித் தேர்வு (TET) மற்றும் போட்டித் தேர்வுகள் (TRB)என நீண்ட, கடுமையான செயல்முறை இருக்கிறது. அதற்கு பிறகுதான் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே இயல்பாகவே அரசு பள்ளி ஆசிரியர்கள் தரமானவர்களாக இருப்பார்கள்.
இருந்தும் கூட, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் தவெக எம்எல்ஏ இளங்கோவன் தனது மகளை, அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறார். இது தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
திருப்புவனம் அருகேவுள்ள கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி ஜெயலெட்சுமி. இவருக்கு தேவமித்ரா என்கிற மகள் உள்ள நிலையில், இளங்கோவன் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது மகள் தேவமித்ரா, கொந்தகை கிராமத்தின் அருகில் உள்ள அகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வந்தார். தற்போது, அவர் 6 ஆம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில்தான் ஒரு எம்.எல்.ஏவாக ஆன பின்னரும் இளங்கோவன் தனது மகளை திருப்புவணத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே 6 ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
அரசு பள்ளியிலேயே தான் பயின்றதாகவும் தன்னுடைய மகளும் அரசு பள்ளியிலேயே தொடர வேண்டும் என்றும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது அரசு பள்ளிகள் மீதான மக்களின் பார்வையை மாற்றியுள்ளது. எம்எல்ஏவின் இந்த செயலை அப்பகுதி பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன் எம்எல்ஏ இளங்கோவனுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications