தங்கம் விலை காலை 1800 சரிந்த நிலையில், மாலையில் 1600 அதிகரித்துள்ளது.. அமெரிக்காவால் நடந்த மாற்றம்
சென்னை: அக்டோபர் 29ம் தேதியான நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்தது. நேற்று மாலை 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அக்டோபர் 30ம் தேதியான இன்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து, ஒரு சவரனுக்கு 1800 ரூபாய் வரை சரிந்து விற்பனையானது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 88,800க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் ஒரு கிராம் 11300க்கும், ஒரு சவரன் 90,400க்கு விற்பனையாகிறது
தங்கம் விலை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக வரி விதித்த பின்னர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்த காரணத்தால், விலை அதிகரித்தபடியே இருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி உலக சந்தையிலும் தங்கம் விலை கடந்த 2 மாதங்களில் மிக கடுமையாக உயரத்தொடங்கியது.

ரஷ்யா உக்ரைன் போர், சீனா அமெரிக்கா வர்த்தக போர் போன்ற காரணங்களால் ஏற தொடங்கியது. அத்துடன் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்ததும் விலை உயர காரணமாக மாறியது. இதன் காரணமாக காலையிலும் மாலையிலும் மாறி மாறி உயர்ந்த தங்கம், ஒரு சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது. உச்சகட்டமாக கடந்த அக்டோபர் 17-ந் தேதி அன்று ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் தங்க நகை விற்பனை ஆனது.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடனான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டினார். அதேபோல், சீனா உடனான வர்த்தக போரையும் சுமூகமாக தீர்க்க முயற்சித்து வருகிறார். இதனால் தங்கத்திற்கு பதில் பழைய படி பலர், பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதனால் தங்கம் விலை அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வந்தது.
கடந்த அக்டோபர் 22-ந் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு வந்தது. அதனைத்தொடர்ந்தும் விலை மேலும் சரிந்து கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் காலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், பவுனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.
இதன்மூலம் நேற்று முன்தினம் நாளில் கிராமுக்கு ரூ.375-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு பவுன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் சென்னையில் விற்பனை ஆனது. தங்கம் விலை கடுமையாக சரிந்ததை பார்த்த மக்கள் நகைகளில் நகை எடுக்க அதிக ஆர்வம் காட்டினார்கள்
ஆனால் தங்கம் விலை அக்டோபர் 29ம் தேதியான நேற்று ஒரே நாளில் பவனுக்கு 2000 ரூபாய் உயர்ந்தது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,210 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தங்கம் விலை உலக சந்தையில் இன்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இது சந்தையில் எதிரொலித்தது. இதன்படி அக்டோபர் 30ம் தேதியான இன்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து, ஒரு சவரனுக்கு 1800 ரூபாய் வரை சரிந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 88,800க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் ஒரு சவரனுக்கு 1600 அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் 11300க்கும், ஒரு சவரன் 90,400க்கு விற்பனையாகியது.
அமெரிக்கா மத்திய வங்கி நேற்று இரவு வட்டியை குறைத்தன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறியது. இது ஒருபுறம் எனில் இந்திய பங்கு சந்தையில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது. இதுவும் தங்கம் விலை கடுமையாக அதிகரிக்க காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications