சொப்பனத்திலும் கண்டில்ல சாரே! புள்ளிப்பூச்சிக்கு கொடுக்கு முளைச்ச மாதிரி.. 2025ல் எகிறிய வெள்ளி விலை
சென்னை: தங்கத்தின் விலை ஏற்கனவே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதைவிட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வந்தது, 2025ஆம் ஆண்டை வெள்ளிக்கான "ஜாக்பாட்" ஆண்டா ஆக்கியது என்று தான் சொல்ல வேண்டும். வருடம் தொடங்கிய ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.93 மட்டுமே இருந்தது. அதன் பிறகு நாள் தோறும் மெதுவாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என உயர்ந்துகொண்டே வந்தது. ஆனால் டிசம்பருக்குள் அந்த உயர்வு வேகமடைந்து, கிறிஸ்துமஸ் காலத்தில் கிராமுக்கு ரூ.255 ஐ எட்டியதை யாருமே எதிர்பார்க்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டும் இல்லாமல், டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளி விலை நேரடியாக கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது. கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2.74 லட்சமாக விற்பனையாகியது. அதே நாளில் மாலையில் மீண்டும் ரூ.11,000 உயர்ந்து, ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.31,000 உயர்வு பதிவானது.
அதன் பிறகு கிராமுக்கு ரூ.285 என்ற உச்சத்தை தொட்டதால், சாதாரண மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே ஆண்டில் இவ்வளவு கடுமையான உயர்வை வெள்ளி முந்தைய காலங்களில் அரிதாகவே பார்த்திருக்கிறது. இந்நிலையில் வெள்ளி விலையின் இந்த் திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என பார்க்கலாம்..

வெள்ளி விலை உயர்வு
இந்த நிலையை பார்த்த பொருளாதார வல்லுநர்கள், 45 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த "ஹண்ட் பிரதர்ஸ்" சம்பவத்துடன் இதை ஒப்பிடுகின்றனர். அப்போது 1979-80ல் வெள்ளியின் விலை மிக வேகமாக உயர்ந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளி 6 டாலரிலிருந்து 49.5 டாலர் வரை ஏறியது. பின்னர் அரசின் கட்டுப்பாடுகளால் மீண்டும் 4 டாலர் வரை சரிந்தது. அதனால் அப்போது முதலீடு செய்த பலரும் பெரிய இழப்பை சந்தித்தனர். அதுபோல் இன்றும் வெள்ளி விலையில் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உருவாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2025 வெள்ளி விலை
வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக தொழிற்துறை தேவை அதிகரிப்புதான் கூறப்படுகிறது. சூரிய மின்சக்தி தகடுகள், மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டர்கள், மருத்துவ கருவிகள் என பல துறைகளில் வெள்ளி அதிக அளவில் பயன்படுகிறது. ஒரு சோலார் பேனலில் 20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் சோலார் பேனல்கள் உற்பத்தி அதிகரிக்கிறது என்பதால், வெள்ளி தேவையும் அதிகரித்துள்ளது. 2023இல் 4,000 டன் அளவுக்கு வெள்ளி சோலார் துறையில் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2024இல் அது 5,500 டனாக உயர்ந்துள்ளது.
வெள்ளி சந்தை போக்கு
மேலும் அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு, டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உலக நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு அதிகரித்தது போன்ற காரணங்களும் விலை உயர்வை தூண்டியிருக்கின்றன. தங்கத்தை விட வெள்ளி தொழிற்சாலை பயன்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், தேவையும் வேகமாக உயர்ந்துள்ளது.
வெள்ளி முதலீடு அபாயம்
ஆனால் நிபுணர்கள் எச்சரிப்பது என்னவென்றால், வெள்ளி விலை ஒருமுறை கடுமையாக சரிந்தால், மீண்டும் பழைய நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகும். அதனால் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். மொத்தத்தில் பார்த்தால், 2025ஆம் ஆண்டு தங்கத்துக்குப் பிறகு வெள்ளியும் வரலாறு காணாத உயர்வை எட்டி, பொதுமக்களையும் முதலீட்டாளர்களையும் அதிர வைத்த ஆண்டாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications