தங்கம் விலை பெரிய அளவில் சரியும்? அதிசயம் நடக்குமா.. பொருளாதார நிபுணர் ஹரிகரன் சொன்ன பாயிண்ட்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை வெறும் இரண்டு மாதத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதுவும் கடந்த 10 நாளில் தொடர்ந்து ஏறியபடி உள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 9ம் தேதி நிலவரப்படி 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் இன்று 91,400 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் 11,425 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி ஏறிக்கொண்டே உள்ள தங்கம் எப்போது குறையும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஹரிகரன் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த தகவல்களை பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதன் காரணமாக பலர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவில் இந்த நிலைமை என்றால், சர்வதேச அளவில், டாலருக்கு பதில் தங்கத்தின் அடிப்படையில் வணிக நடக்க வேண்டும் என்ற உலக நாடுகளில் குரல் வலுத்து வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்கினற்ன.

இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு வருகிறது. இன்றைய சூழலில் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
தங்கம் விலை கடந்து வந்த பாதை
கடந்த செப்டம்ப்ர் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. நேற்று காலை ரூ.100 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், ரூ.800 அதிகரித்து பவுன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இந்நிலையில் 2-வது முறையாக நேற்று மதியம் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது மேலும் ரூ.85 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ரூ.680 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. ஆனால் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு சவரன் இன்று 91,400 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் 11,425 ரூபாய்க்கு விற்கிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்து 80 அதிகரித்திருக்கிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. இந்த சூழலில் தங்கம் விலை எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இதுபற்றி பொருளாதார நிபுணர் ஹரிகரன் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
பெரிய அளவில் சரியும்
பேட்டியின் போது ஹரிகரன் கூறுகையில், இன்று தங்கம் விலை ஒரு கிராம் 11,425 ஆக இருக்கிறது.. இந்த தங்கம் விலை ஒரு கிராம் 12 ஆயிரத்தை தாண்டும் போது, ஒரு வேளை அதற்கு பிறகு சரிந்தது என்றால், அது பெரிய அளவில் சரிவாக இருக்கும். இப்போது சரிந்தால் 10 சதவீதம் அளவிற்கு சரியும். இன்னும் சரிந்தால், ஒரு கிராம் 9500 ரூபாய் வரை சரியும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.. தங்கம் விலை மீண்டும் சரியும் என்றே எதிர்பார்க்கிறேன். இஸ்ரேஸ் காசா இடையே போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் கொண்டு வந்துள்ளார்கள்.. அதை இருவரும் ஏற்றுக்கொண்டால் அந்த போர் கொஞ்சம் சரியாகும்.
தங்கம் விலை எப்போது குறையும்
அதேபோல் வர்த்தக உடன்படிக்கைகள் ஓரளவு நவம்பர், டிசம்பரில் செட்டில் ஆக வாய்ப்புகள் உள்ளது. ரஷ்யா உக்ரைன் போரை யாராலும் கணிக்க முடியாது. அது திரும்பவும் பெரிய அளவில் உருவெடுத்தால் மீண்டும் தங்கம் மேலே தான் போய்விடும். ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேஸ் காஸா போர், இந்தியா அமெரிக்காவிற்கு விதித்த வரி இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியானால் தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.
தங்கம் விலை ஒரு லட்சம் தாண்டுகிறதா
தங்கம் விலை ஒரு லட்சம் போகுமா என்றால், ஒரு கிராம் 12200 அல்லது 12300ஐ தொட்டால் ஒரு லட்சம் போய்விடும். இன்று ஒரு கிராம் தங்கம் 11,425 ரூபாய்க்கு விற்கிறது. 12000 போனால், ஏறக்குறைய 96000 ஆகிவிடும். தங்கம் விலை ஒரு லட்சம் போவதற்கு 25 சதவீதம் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என்பது நல்ல விஷயம் கிடையாது. ஆனால் தங்கம் விலை ஒரு லட்சத்தை நெருங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சில நிபுணர்கள் தங்கம் விலை ஒரு கிராம் 20000க்கு கூட போக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை தங்கம் விலை அதிகரிக்க வேண்டும் என்றால் மக்கள் வாங்க வேண்டும். ஆனால் வாங்ககூடிய தன்மை கம்மியா ஆகிக்கொண்டே போகிறது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications