மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதால் இவ்ளோ நன்மைகளா? ஆனால், இதை மட்டும் செய்யவே கூடாதாம்!
மதியம் சாப்பிட்ட உடன் ஒரு குட்டித்தூக்கம் போடுவது உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும் என்று பல ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன.
சென்னை: என்னதான் இரவு நன்றாக தூங்கினாலும் சிலருக்கு சாப்பிட்ட உடன் தூக்கம் கண்ணை சொக்கும். ஆனால், பகலிலே தூங்குவதால் சோம்பேறி என்று சொல்லிவிடுவார்களோ என பலரும் தயக்கத்தில் தூக்கத்தை தவிர்ப்பதுண்டு. ஆனால், மதிய உணவுக்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார். குட்டித்தூக்கம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? குட்டித்தூக்கம் என்ற பெயரில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தூக்கம் மனிதனுக்கு அத்தியாவசியமானது. உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 6-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
என்னதான் இரவு தூங்கினாலும் பகலில் சிலருக்கு தூக்கம் கண்ணைக் கட்டும். அதுவும் மதிய உணவிற்கு பிறகு தூக்கம் இயல்பாகவே பலருக்கும் வரும். இருந்தாலும் பகலில் தூங்குவதால் சோம்பேறி என்று எண்ணிவிடுவார்களோ என எண்ணி பலரும் தூங்காமல் தவிர்த்து விடுவதுண்டு.

ஏராளமான பலன்கள் உள்ளதாம்
ஆனால், பகலில் இப்படி சிறிய குட்டி தூக்கம் போடுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நினைவு சக்தி அதிகரிப்பு, வேலையில் திறன் அதிகரிப்பு, நல்ல மனநிலை, துடிப்புடன் இருப்பது, மன அழுத்தம் குறைவது என ஏராளமான பலன்கள் உள்ளதாம். எனவே இரவு சரியாக தூங்கவில்லை என்றாலோ..ஓய்வு எடுக்க வேண்டும் என்றாலோ.. நீங்கள் தாராளமாக எந்த தயக்கமும் இன்றி ஒரு குட்டித்தூக்கத்தை மதியம் போடலாம்.

எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்
இருந்தாலும் மதிய நேரங்களில் நீண்ட நேரம் தூங்குவது என்பது நல்லது அல்ல என்றும் சொல்கிறார்கள். மதியம் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்டவைகள் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், மதிய உணவுக்கு பிறகு குட்டித்தூக்கம் போடும் போது எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் வருமாறு:-

குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* மதிய வேளையில் குட்டித்தூக்கம் போடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
* குறிப்பாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய்கள் பாதித்தவர்களுக்கு குட்டித்தூக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* இரவு நேரங்களில் நல்ல தூக்கம் வருவதை மேம்படுத்தும் (இன்சோமேனியா, அடிக்கடி பயணம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு).
* உடலின் கொழுப்பு சத்துக்கள் குறைய உதவும்.

சரியான அளவில் இருந்தால் மட்டுமே
ஆனாலும் குட்டித்தூக்கம் என்பது சரியான அளவில் இருந்தால் மட்டுமே இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, சாப்பிட்ட உடன் ஒரு சின்ன தூக்கத்தை போடுவது, எந்த பொசிஷனில் தூங்குகிறோம் என்பதும் அடங்கும் (இடது பக்கமாக சரிந்து படுக்க வேண்டுமாம்). 10 முதல் 30 நிமிடங்கள் வரையே குட்டித்தூக்கம் போடலாம். அதேவேளையில் மிக இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள், உடல் நலம் பாதிப்பு உள்ளவர்கள் 90 நிமிடங்கள் வரை தூங்கலாம்.

வீட்டில் இருந்தால்..
வீட்டில் இருந்தால் சேரில் அமர்ந்தபடி எல்லாம் தூங்காமல் படுக்கையில் போய் குட்டி தூக்கம் போடுவதே சிறந்தது. அலுவலகத்தில் இருந்தால் டெஸ்க்கில் தலையை வைத்து லேசான ஒரு தூக்கத்தை போட்டு விடுங்கள். அலுவலகத்தில் இதற்கு வாய்ப்பே இல்லையென்றால் ஜன்னல் ஓரமாக சென்று வானத்தை பார்த்து கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

எதையெல்லாம் செய்யக்கூடாது
* சாப்பிட்ட பிறகு தூக்கம் என்பதற்காக மாலை 4 மணிக்கு பிறகு தூக்கம் போடக்கூடாது.
* சாப்பிட்ட உடன் காஃபி, டீ, சிகரெட், சாக்லேட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கிவிட கூடாது.












Click it and Unblock the Notifications