குழந்தைகளுக்கு திடீரென உடல் எடை குறைகிறதா.. அப்படின்னா இந்த டெஸ்ட் அவசியம்.. டாக்டர் பரூக்
சென்னை: சிறுவர் சிறுமியரிடையே அதிகரித்து வரும் டைப் டூ நீரிழிவு நோய் குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நீரிழிவில் இரண்டு வகை உண்டு. முதல் வகை நீரிழிவு இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று போவதால் ஏற்படும் நோய் நிலை. இதை INSULIN DEPENDANT DIABETES MELLITUS அல்லது டைப் ஒன் டயாபடிஸ். இந்த வகை நீரிழிவு குழந்தைகளிடையேவும் சிறார் சிறுமியிடத்தும் கண்டறியப்படும் என்பதால் இதற்கு ஜுவனைல் டயாபடிஸ் ( குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படும் நீரிழிவு ) என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாம் வகை நீரிழிவு - இரண்டாம் வகை நீரிழிவு என்பது நாற்பது வயதைத் தொடும் போது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் நிலையாகும். இதில் கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பு இருக்கும். எனினும் சுரக்கப்பட்ட இன்சுலின் அதன் பணியை சரிவர செய்யாது. இதை "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" ( இன்சுலின் எதிர்ப்பு நிலை) என்று அழைக்கிறோம்.
தற்காலத்தில் அதிகரித்து வரும் இனிப்பு சுவை கொண்ட பேக்கரி உணவுகள் மற்றும் மாவுச்சத்து அதிகம் உண்ணும் உணவு முறை அதனுடன் உடல் உழைப்பின்றி இருப்பதால் குழந்தைகளிடமும் சிறார் சிறுமியிடத்தும் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது. இதன் விளைவாக உடல் பருமன் ( Childhood Obesity)சருமத்தில் கருந்திட்டுகள் ( Acanthosis nigricans)போன்றவை தோன்றிவிடுகின்றன.
இந்நிலையில் பெரியவர்களுக்கு வர வேண்டிய டைப் டூ டயாபடிஸ் குழந்தைகள், சிறார் சிறுமியிடத்திலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இது "ஆபத்தான போக்காகும்" குழந்தைகளிலோ சிறார் சிறுமியிடத்திலோ
- திடீரென உடல் எடை மெலிதல்
- அதிக தடவை சிறுநீர் கழித்தல்
- பிறப்புறுப்பில் புண் தோன்றுதல்
- அளவுக்கு அதிகமான பசி
- அளவுக்குக்கு அதிகமான தாகம்
போன்ற அறிகுறிகள் தோன்றுமாயின் காலை வெறும் வயிற்றில் ரத்த க்ளூகோஸ் ( Fasting Blood glucose).
உணவு சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு ரத்த க்ளூகோஸ் ( 2hours post prandial blood glucose) மூன்று மாத ரத்த க்ளூகோஸ் சராசரியை அளவிடும் ஹெச் பி ஏ ஒன்சி (Hba1c) போன்ற பரிசோதனைகளை செய்து பார்ப்பது சிறந்தது. இந்த பரிசோதனைகளில் நீரிழிவுத் தன்மை இருப்பது தெரிந்தால் சி - பெப்டைடு ( C - Peptide) எனும் ரத்தப் பரிசோதனையை காலை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்.
இதன் மூலம் கணையத்தில் இருந்து இன்சுலின் உற்பத்தி ஆகிறதா ? இல்லையா ? என்பது தெரிய வரும். சி பெப்படைடு அளவுகள் சரியாக இருப்பின் வந்திருப்பது டைப் டூ டயாபடிஸ். சி பெப்படைடு அளவுகள் மிகக் குறைவாக இருப்பின் வந்திருப்பது டைப் ஒன் டயாபடிஸ்.
டைப் ஒன் டயாபடிஸாக இருப்பின் கட்டாயம் தொடர்ந்து இன்சுலின் ஊசி போடப்பட வேண்டும். டைப் இரண்டு டயாபடிஸாக இருப்பின் மருத்துவ பரிந்துரையில் முறையான மருத்துவமும் இதனுடன் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை நிறுத்துவதும் மாவுச்சத்து உட்கொள்ளல் அளவுகளை கட்டுப்படுத்துவதும் உடல் உழைப்பு மற்றும் பயிற்சியை அதிகரிப்பதும் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும்.
சிறார் சிறுமியரிடத்தில் நீரிழிவு ஏற்படுவது , முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications