அனல் காய்ச்சல்..வறட்டு இருமல்..உடல் வலி..கவலை வேண்டாம்..அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு!
குளிர்காலம் வந்து விட்டால் கூடவே சில உடல் நல தொல்லைகளும் வந்து விடும். தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், மூக்குஒழுகுதல், வறட்டு இருமல் ஆகியவை தொந்தரவை தரும்.
சென்னை:இரவு நேரத்தில் குளிரும் பகல் நேரத்தில் வெயிலுமாக கோடை சுட்டெரிக்கிறது. பருவநிலை மாற்றம் பலரது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். ஒரு பக்கம் மூக்கு ஒழுகும், தலையும் பாரமாக இருக்கும். சளித்தொந்தரவு, குரலில் மாற்றம் என பலரும் இன்றைக்கு நோய் தொந்தரவில் சிக்கித் தவிக்கின்றனர். சளி தொந்தரவுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை வீட்டிலேயே மருத்துவம் பார்க்கலாம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்று சொல்வார்கள். அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை எடுத்து அம்மா கை பக்குவத்தில் சில மருந்துகளை செய்து சாப்பிட்டால் எத்தகைய சளியாக இருந்தாலும் உடல்வலியாக இருந்தாலும் ஓடியே போய்விடுமாம்.
இஞ்சி, சுக்கு போன்றவை இருமல், சளி தொந்தரவுகளுக்கு அருமையான மருந்துகள். வீட்டு அஞ்சறைப்பெட்டியில் அவற்றை வைத்திருப்பது கூடவே டாக்டரை வைத்திருப்பதற்கு சமமானது. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும்.
சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இலவங்கப்பட்டை இலவங்கம், மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி அருந்தினால் தொண்டை வலி குறையும். சளித்தொல்லை அதிகமாகாமல் தடுக்கலாம். கொரோனா, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற மிகப்பெரிய நோய்கள் கூட வீட்டு மருத்துவத்தில் குணமாகியுள்ளது. வைரஸ் காய்ச்சலையும் வீட்டு மருத்துவத்தில் சமாளிக்கலாம்.

இஞ்சியும் தேனும்
காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும். லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன்மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.

சுக்கும் தேனும்
கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து பருகலாம். ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது சளி, காய்ச்சலை வராமல் தடுக்கும். வந்தாலும் எளிதில் குணமாகும்.

தூதுவளை ரசம்
தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது. சின்ன வெங்காயம் சளியை முறிக்கும். சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் நெஞ்சில் பிடித்திருக்கும் சளி கரையும். வறட்டு இருமல் இருந்தாலும் குணமாகும்.

ஏலக்காய் சீரகம் பொடி
இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்க மார்பு சளி தீரும். ஏலக்காயை பொடி செய்து, சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வர சளி தொந்தரவுகள் கட்டுப்படும். ஏலக்காயை பொடி செய்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து குடிக்கலாம். இது சளி, காய்ச்சல் வைரஸ் தொற்றுகளில் இருந்து காக்கும்.

மூக்கடைப்பு பிரச்சினை
மூக்கடைப்பு தொல்லை அதிகமாக இருந்தால் ஓம விதைகளை துணி ஒன்றில் முடிச்சு போன்று கட்டி, நேரடியாக மூக்கில் வைத்து அதன் மணத்தை இழுத்து சுவாசிக்க வேண்டும். மூக்கில் ஏற்படும் அடைப்பினை இது சரி செய்யும். சளி, தொண்டை வலி, காய்ச்சல் இவற்றிற்கு சீரகம் நல்ல மருந்தாகும். இதிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மை உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்.

உடல் நலத்தை காக்கும் விரதம்
சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால் ஒருநாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் பட்டினி இருக்கலாம். காய்ச்சல் நேரங்களில் சுடு கஞ்சி வைத்து சாப்பிடலாம். மிளகு ரசம், கொள்ளு ரசம் சாப்பிடலாம், மூலிகை சூப் குடிக்கலாம். இதன் மூலம் உடலிலுள்ள அனைத்து நச்சுத்தன்மை கொண்ட பொருள்களும் வெளியேறும்.

சூடான உணவுகள்
எந்த உணவையும் சூடாக சாப்பிடுவது தொண்டைக்கும் இதமாக இருக்கும். ஜலதோஷம் பிடித்த நேரங்களில் செரிக்க சிரமமான உணவுகளை தவிர்க்க வேண்டும். சளி தொந்தரவு இருக்கும் நாட்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடலாம். எண்ணெய் மற்றும் வாசனை பொருட்கள் கலந்த உணவு, பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நலம். இதமான சுடுநீர் தொண்டைக்கு இதத்தை தரும். சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு வீட்டு மருத்துவத்திற்கு சளி தொந்தரவு கட்டுப்படும். அதற்கும் கட்டுப்படாவிட்டால் மருத்துவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.












Click it and Unblock the Notifications