சிறியாநங்கை சிறப்பு.. கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சிறியா நங்கை தூள்.. இனிப்பு பலனை தரும் கசப்பு மூலிகை
சென்னை: மலேரியாவுக்கும், நீரிழிவு நோய்க்கும், கல்லீரல் நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படும் சிறியாநங்கையின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? இந்த ஒரே ஒரு மூலிகையால், உடலுக்கு கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
வேப்பிலையை போலவே காணப்படும் இந்த சிறியாநங்கை, சுவையும் வேப்பிலையை போலவே இருக்கும். இந்த கசப்புதான், உடலிலுள்ள நச்சுக்கள், தொற்றுக்களை உடலிலிருந்து விரட்ட தூண்டுகோலாகின்றன.

விஷப்பூச்சிகள்: முன்பெல்லாம் மன்னர்கள் வேட்டைக்கு போனால், சிறியாநங்கை செடியின் வேர்களை கைகளில் கட்டிக்கொண்டு, வாயிலும் அதன் வேர்களை கடித்து கொண்டு செல்வார்களாம். இதனால், மலைகள், காடுகளில் விஷஜந்துக்கள் கடித்தாலும் விஷம் ஏறாது.. இந்த சிறியாநங்கை இலைகளுடன் சிறிது மிளகையும் அரைத்து சாப்பிடும்போது எப்பேர்பட்ட விஷமும் உடலிலிருந்து இறங்கிவிடும் என்பார்கள்.
கிராமங்களில் பாம்புக்கடிக்கும், தேள்கடிக்கும், இந்த சிறியாநங்கைதான் இன்னமும் மருந்தாகி கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு இன்றுவரை இந்த இலைகள்தான் மருந்தாக பயன்படுகிறது. கிராமங்களில் பாம்பு, விஷப்பூச்சி நடமாடும் இடங்களில் வசிப்பவர்கள், வயல்வெளி ஓரங்களில், சிறியாநங்கை செடியை தொடர்ந்து வளர்த்து வருகிறார்கள்.
வீக்கம்: உடலில் வீக்கம் ஏற்பட்டாலும், இந்த சிறியாநங்கை இலைகளுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பற்றுபோல போட்டால், வீக்கம் குறைந்துவிடும். மலேரியாவிற்கு மிச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. ஃப்ளுகாய்ச்சல், சைனஸ், சளித்தொந்தரவு போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிறியாநங்கை கை கொடுத்து உதவுகிறது.
மதுபோதைக்கு அதிகமாக இருப்பவர்கள், இந்த சிறியாநங்கையை சாப்பிட்டு வரும்போது, கல்லீரலிலுள்ள கெட்ட கழிவுகளும் விலகிவிடும். அதாவது, இந்த இலையை அரைத்து சாறு எடுத்து, காய்ச்சாத பசும்பாலுடன், வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடித்து வரும்போது, உடம்பிலுள்ள நச்சுக்கள் வெளியேறி, ரத்தமும் சுத்தமாகும்.
சர்க்கரை நோய்: இந்த கசப்பு இலைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்.. சிறியநங்கை இலை பவுடர், காய்ந்த நெல்லிக்காய் பவுடர், வெந்தயம் பவுடர், போன்ற அனைத்தையும் 1 டம்ளர் தண்ணீரில், 1 ஸ்பூன் கலந்து வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்பார்கள். தினமும் காலையில் உணவுக்கு முன்பு சிறியாநங்கையை சாப்பிட்டு வருவதால், சர்க்கரை குறைவதுடன், கல்லீரல் நோய்களும் விலகிவிடும்.
இதிலுள்ள இலையை வெறுமனே மென்று விழுங்கினாலே இன்சுலின் சுரப்பு உண்டாகுமாம்.. சிறியாநங்கையில் அமரோஜென்டின் என்ற உயிர்வேதியியல் கலவை உள்ளது.. இந்த கலவையானது நீரிழிவு எதிர்ப்பு விளைவை பெற்றுள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக உள்ளது.
ஆலோசனை முக்கியம்: சிறியாநங்கை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அதேசமயம், இந்த மருந்தை நீண்ட நாட்களுக்கு சாப்பிடக்கூடாதாம். எனவே, சர்க்கரை நோயாளிகள், கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டர்களின் ஆலோசனையை பெறாமல், இதனை மருந்தாக உட்கொள்ளக்கூடாது.












Click it and Unblock the Notifications