நீங்க ஜிம் போறீங்களா.. 6இல் ஒருவருக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருக்கு.. இளைஞர்களே கவனம்
லண்டன்: ஜிம் செல்லும் நபர்களில் 6இல் ஒருவருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் வெளியான ஆய்வில் பகீர் முடிவுகள் தெரிய வந்துள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழல் இருப்பதால் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாகவே இப்போது பலரும் ஜிம்மிற்கு செல்கிறார்கள்.

ஜிம் செல்வோர் குறித்து சில முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. Reproductive BioMedicine என்ற ஆய்விதழலில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜிம்: அதாவது ஜிம் செல்லும் சுமார் 150க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வை நடத்தி, அதன் முடிவுகள் இப்போது வெளியிட்டுள்ளார். அதில் சுமார் 79% ஆண்களுக்கு புரோட்டீன் சப்ளிமெண்ட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிவதில்லையாம். இது ஆபத்தான ஒரு போக்காகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏனென்றால் அதிக அளவு ஈஸ்ட்ரோஜனைக் கொண்டிருக்கும் புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் உட்பட ஜிம் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்வதால் ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது குறித்து ஆண்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. அதில் சுமார் 52% பேர் இதற்கு முன்பு ஆண்மைக் குறைவு குறித்து யோசித்துள்ளனர். இருப்பினும், அதில் 14% மட்டுமே ஜிம் நடைமுறைகள் அல்லது புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர்.
ஆண்மை குறைவு: கருவுறுத்தல் சிக்கல்களைக் காட்டிலும் ஜிம் முக்கியம்தானா என்ற கேள்விக்கு 38% பேர் இல்லை என்று பதிலளித்துள்ள நிலையில், 28% பேர் ஆம் எனப் பதிலளித்துள்ளனர். அதேநேரம் ஆண்களைக் காட்டிலும் சப்ளிமெண்ட்கள் ஏற்படும் ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பெண்கள் அதிகம் தெரிந்து வைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜிம் செல்வோரில் 6இல் ஒருவருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டாக்டர். மெரிக் கல்லாகர் கூறுகையில், "ஆரோக்கியமாக இருப்பதும் நல்ல வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதும் முக்கியம். இருப்பினும், ஆண்களிடையே ஏற்படும் ஆண்மைக் குறைவு என்பது அதிகளவில் புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்வதால் தான் நடக்கிறது.
பல்வேறு பிரச்சினைகள்: இதன் மூலம் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு உடலில் அதிகரிக்கும். அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் என்பது ஆண்களின் விந்தணு உற்பத்தியின் அளவையும் தரத்தையும் பாதிக்கும். இது மட்டுமின்றி தற்போது சந்தையில் கிடைக்கும் பல புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸில் அனபோலிக் ஸ்டெராய்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.. இது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைக்கும்.. மேலும், பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
6இல் ஒருவருக்கு ஆண்மைக் குறைவு: ஆண்மை குறைவு என்பது சர்வதேச அளவில் முக்கியமான பிரச்சினையாக மாறி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் படி 6 பேரில் ஒருவருக்கு இப்போது ஆண்மைக் குறைவு பிரச்சினைகள் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது மற்றொரு சோகம்.
ஆண்மைக் குறைவு எதனால் ஏற்படுகிறது.. தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஸ்டீராய்டு பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து பொதுமக்களுக்குத் தெரிகிறது. ஆனால், ஜிம்மில் புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என அவர்களுக்குத் தெரிவதில்லை.
அதற்காக ஜிம் செல்வதே ஆபத்து என்று நாங்கள் கூறவில்லை. புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சினை இருக்கிறது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை எங்கள் நோக்கம்" என்றார்.












Click it and Unblock the Notifications