திண்டிவனத்தில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை! டாக்டர் பரூக் சொல்லும் காரணம் என்ன?
சென்னை: திண்டிவனம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் பொறியியல் பட்டதாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தத் தற்கொலையைக் கூட எள்ளி நகையாடும் பதிவுகளை எம் சகோதர சகோதரிகள் இயற்றி காணக்கிடைக்கையில் என் உள்ளக்கிடக்கையில் சில சிந்தனைகள் ஊற்றெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

திருமணம் புரிந்து தினமும் இறப்பதற்கு பதில் முன்கூட்டியே இத்தகைய முடிவை எடுத்து விட்டார் போல என்றும் 28 வயசுக்கே இப்படி பண்ணியிருக்கான், நானெல்லாம் 30+ தாண்டியும் சும்மா அமைதியா இருக்கேன் என்று சிலரும் இதுக்கெல்லாமா தற்கொலை பண்ணிக்குவாங்க... கல்யாணம் பண்ணாம இருக்குறத அனுபவிக்கிறத விட்டுட்டு என்று சிலரும் தொடர்ந்து பதிவுகள் எனக்குக் காண்பிக்கப்பட்டு வருவதைக் காணுங்காள் ஒருவரின் மரணத்தை வைத்து நகையாடுவது அவருக்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது அன்புக்குரியோருக்கும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாக இருக்காது என்பதை நாம் உணர வேண்டும்.
உண்மையில் சமுதாயத்தில் நிகழும் தற்கொலைகள் யாவும் பல நோய்களின் அறிகுறிகளே ஆகும். அறிகுறிகளைக் காணுங்காள் நோய் என்னதென சிந்தித்து அதற்குரிய மருந்தைத் தருவதே மருத்துவரின் குணமாகும். இங்கு திருமணம் தள்ளிப் போவது அதனால் நிகழ்ந்த துயரம் இது அறிகுறி என்றால் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய் தான் என்ன? 12வது முடித்தால் அடுத்து என்ன மேற்படிப்பு என்றும் காலேஜ் முடித்த உடனே அடுத்த எங்கே வேலை என்றும் வேலை கிட்டியதும் எப்போது கல்யாணம் என்றும் கல்யாணம் ஆன அடுத்த பீரியட்ஸைக் கூட உற்று நோக்கி எப்போது குழந்தை என்றும் குழந்தை உண்டானபின் பிறக்க இருப்பது ஆண் குழந்தை தான் என்றும் அந்தக் குழந்தையை எங்கு பயிற்றுவிக்க வேண்டும்? என்ன மேற்படிப்பு பயில வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்? என்று கேட்டு மீண்டும் அந்த குழந்தை பெரியவனானதும் எப்போ கல்யாணம்?
ஏன் தள்ளிக் கொண்டே போகிறது? என்ன தான் ஆச்சு? என்று சதா நச்சரித்துக் கொண்டே இருக்கும் சமூகமாகிய "நாம்" தான் இத்தகைய தற்கொலைகளுக்கு காரணமான முக்கிய நோயாகும். திருமணம் மிக எளிமையானது. இரண்டு மனமொத்த அன்றில் பறவைகள் சேர்ந்து தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எந்தத் தடையும் இருப்பதில்லை.
ஆனால் இங்கு நாகரீகத்தில் பண்பாட்டில் நுண்ணறிவில் உச்சம் தொட்ட மனித இனத்தில் ஒரு மனிதனும் மனிதியும் மனமொத்து இல்லற பந்தத்தில் இணைவதற்கு ஆயிரம் முட்டுக் கட்டைகளை சமூகமாகிய நாம் தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். பெண்ணாக இருந்தால் அந்தத் தடை - வரதட்சணை என்ற பெயரில் இருக்கிறது.
செய்யும் வேலையை விட்டு விட வேண்டும் என்று வஞ்சிக்கிறது. அப்படியே சம்பாதித்தாலும் பெண் சம்பாத்தியத்தில் சிறு துரும்பு கூட அவளின் பெற்றோருக்குச் சென்று விடக் கூடாது என்று மேலும் மேலும் சிறகுகளை வெட்டி எரியும் வேலையையே சமூகம் செய்து வருகிறது. ஆண் என்றால் அந்தத் தடை - எதிர் வரதட்சணை என்ற பெயரில் 20 களின் மத்தியில் அல்லது கடைசியில் இருக்கும் ஒரு ஆண் மகனிடம் என்ன எதிர்பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்காமல் கட்டாயம் சொந்த வீடு மாப்பிள்ளை பேரில் இருக்க வேண்டும்.
ஈ எம் ஐ இருக்கக் கூடாது , கூட்டுக் குடும்பம் ஆகாது , ஐந்து இலக்க சம்பளம் வேண்டும். நைட் சிப்ட் இருக்கக் கூடாது.இப்படியெல்லாம் விதிமுறைகள் அடுத்து வீட்டில் பல சகோதரிகளுடன் பிறந்த ஆண் மகனுக்கு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் செய்து முடித்த பின் தான் திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் நம்மிடையே அமலில் உள்ளது.
இந்த சட்டத்தின் விளைவால் வாழ்க்கையைத் தொலைத்து கடலில் திக்குமுக்காடும் பல தோணிகளை நான் அறிவேன்.
திருமணம் ஆகிவிட்டால் பையன், குடும்பத்தையும் சகோதரிகளையும் கை கழுவி விட்டு மனைவியுடன் ஓடிவிடுவான் என்ற பாதுகாப்பின்மை உணர்வின் வெளிப்பாடே இத்தகைய சட்டத்திற்குக் காரணம்.
நான்கு சகோதரிகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு நாற்பது+ வயதில் திருமணம் செய்து தற்போது மகப்பேறின்மைக்கு சிகிச்சை பெற்று வரும் சகோதரரை நான் அறிவேன் . மூன்று சகோதரிகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு முப்பதுகளின் கடைசியில் திருமணம் ஆகாமல் பெண் கிடைக்காமல் நிற்கும் சகோதரனையும் நான் அறிவேன் பெண்களைப் பொருத்தவரை அவர்களின் உடல் சார்ந்த விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதாவது வெளித்தோற்றம் தோலின் நிறம் போன்றவற்றை திருமண சந்தையில் அதிக கவனம் செலுத்திப் பார்த்து பலர் நிராகரிப்புக்கு உள்ளாகின்றனர்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறையில் நம்பர் ஒன் ரேங்க் வாங்கிய மருத்துவர் ஒருவருக்கு திருமணம் முடிக்க திருமண சந்தையில் ஐம்பது கோடி வரதட்சணை கேட்டதாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு பார்த்தேன். கல்வி எதற்கு படிக்க வேண்டும்? அதிலும் மருத்துவம் ஏன் படிக்க வேண்டும்? எய்ம்ஸில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றாலும் இன்னொரு உயிரையும் உடலையும் அட்டைப் பூச்சி போல் உறிஞ்சி வாழத் துணிய எது முன் நின்று உதவுகிறது? நமது சமூகம் தான், வேறு யார்?
இன்னும் திருமணங்களுக்குத் தடையாக நமது சமூகம் பல பல கோட்டைகளைக் கட்டி வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து
முடிக்க வாய்ப்பில்லாத ஒரு சகோதரன் எடுத்த துன்பகரமான முடிவை நாமும் எள்ளி நகையாடக் கூடாது.நம்மால் இயன்ற அளவு
திருமணங்களை எளிமையாக்கி பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டு திருமணங்களை ஒரு மனிதனும் மனிதியும் அவர்களது இளமையில் நடந்திடுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications