விஜய் ஆண்டனி மகளுக்கும் “இந்த” பிரச்சனைகளா..டீனேஜ் தற்கொலைகளுக்கு காரணம் என்ன? பெற்றோருக்கு வார்னிங்
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்திருக்கும் நிலையில், பதின் பருவத்தினர் தற்கொலைகளுக்கான காரணம் என்ன? பெற்றோர் இதை தடுப்பது எப்படி என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட திரைப்பிரபலமாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது மகள் சென்னை தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இவர் நள்ளிரவு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்பட்ட பிரபலமான விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் பதின் பருவத்தினரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மாறி வரும் வாழ்க்கை சூழல், இந்த வயதில் உடலில் ஏற்படும் மரபணு மாற்றம், குடும்ப, புற சூழல்கள் போன்றவற்றால் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் பதின் பருவத்தினர் அதிகம் தற்கொலை செய்து கொள்வது ஏன்? குழந்தைகள் தற்கொலை எண்ணத்தில் இருப்பதை அறிந்து பெற்றோர் உதவுவது எப்படி? என்பது பற்றி விரிவாக பார்ப்போம். தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன், ஒருவர் மரணத்தை விரும்பும் எண்ணங்களை கொண்டிருக்கலாம். இதையே தற்கொலை எண்ணம் அல்லது தற்கொலை நடத்தை என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான (CDC) தெரிவித்து உள்ளது, ஆண்கள் பெண்களை விட நான்கு மடங்கு அதிகளவில் தற்கொலை செய்து இறக்கின்றனர். ஆனால், பெண்களே ஆண்களை விட தற்கொலை முயற்சி செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இளைஞர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய காரணம் மன அழுத்தம். பதின் பருவம் என்பது மன அழுத்தம் நிறைந்த காலகட்டமாகும். இது உடலியல் மாற்றங்கள், எண்ணங்களில் மாற்றங்கள் மற்றும் உணர்வுகளில் மாற்றங்கள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து உள்ளது. மன அழுத்தம், குழப்பம், பயம் மற்றும் சந்தேக எண்ணங்கள் இளைஞர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிக்கலாம்.
போட்டி மிகுந்த காலக்கட்டத்தில் கல்வி, தேர்வுகள், வேலைவாய்ப்பு போன்றவை அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சில இளைஞர்களுக்கு வயதுக்கு ஏற்ப இயல்பான வளர்ச்சி மாற்றங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், பெற்றோர் விவாகரத்து, உறவுகளைவிட்டு பிரிதல், வசிப்பிடத்தை மாற்றுதல், நட்பு வட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சனைகள், பிற இழப்புகள் போன்றவை அவர்களுக்கு மிகவும் கடினமாக அல்லது சமாளிக்க முடியாததாக தோன்றலாம். சிலர் இதற்கான தீர்வாக தற்கொலையை தேர்வு செய்கிறார்கள்.
பதின் வயதினரின் தற்கொலைகள் என்பது அவர்களின் வயது, பாலினம், பழக்க வழக்கங்கள் மற்றும் சமூக தாக்கங்களை பொறுத்து மாறுபடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மன அழுத்த பிரச்சனைகள் ஏற்படுதல். கேலி, கிண்டல் செய்யப்படுதல். பெற்றோரின் மரணம் போன்ற பெரும் இழப்புகள். குடும்பத்தில் ஏற்படும் தொடர் பிரச்சனைகள். குடும்பத்தில் நிகழும் தற்கொலை மரணங்கள்.
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, மன ரீதியாக துன்புறுத்தப்படுதல், அதிகளவிலான போதைப் பொருட்களை பயன்படுத்துதல். பிறரின் தற்கொலை உணர்வுகளை ஆர்வமாக கவனித்தல், தற்கொலை செய்திகள், கதைகள், சினிமாக்களை பார்த்தல் போன்றவையும் இதற்கு காரணமாக மாறலாம்.
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். உண்ணும் மற்றும் உறங்கும் பழக்கங்களில் மாற்றங்கள், வழக்கமான செயல்களில் ஆர்வம் குறைதல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனிமையை விரும்புதல், தனிப்பட்ட தோற்றத்தை கவனிக்காமல் இருத்தல், தேவையில்லாத விசயங்களுக்கு ரிஸ்க் எடுப்பது, மரணத்தை சிலாகித்து பேசுதல் போன்றவை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல், வயிற்று வலி, தலைவலி, அதிக உடல், மனச் சோர்வு போன்ற உடல் உபாதைகள், படிப்பில் ஆர்வம் குறைதல், ஆர்வமாக செய்த விசயங்களில் சலிப்பாக உணர்வது, கவனச்சிதறல், தற்கொலை செய்யப்போகிறேன் என விளையாட்டாக பேசுவது, 'எனக்கு பிரச்சனை உள்ளது, வாழவே பிடிக்கவில்லை' என்பன போன்ற வார்த்தைகளை கூறுவது, வழக்கத்துக்கு மீறிய உற்சாகம், பிடித்த விசயங்கள், நெருக்கமான நபர்களை விட்டு ஒதுங்குவது, வித்தியாசமான கருத்துக்களை பேசுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவை. பெற்றோர் இதுபோன்று நடந்துகொள்ளும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு இருந்தால் 14417 என்ற பள்ளிக்கல்வித்துறை உதவி எண்ணை அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications