சென்னை மாநகர பேருந்துகளால் கொரோனா வைரஸ் பரவுமா?.. அண்ணா பல்கலை. ஆய்வில் பகீர் தகவல்
சென்னை: மாநகர பேருந்துகளால் கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து ஆராய்ச்சியில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது வரை புரட்டி போட்டு வருகிறது. அந்த வைரஸின் தாக்கம் அவ்வளவாக தற்போது இல்லாவிட்டாலும் அதன் இருப்பு என்பது இருக்கத்தான் செய்கிறது.
கடந்த 2020, 2021 ஆண்டுகளில் முதல் அலை, இரண்டாம் அலை என இந்தியாவில் கொரோனா உக்கிரமாக இருந்தது. இதனால் பல்வேறு உயிர்கள் இறந்தன. கொரோனா பாதித்து சீரியஸாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்கக் கூட இடம் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

ஊரடங்கு உத்தரவு
இந்த நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் இயக்கம் என அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் பொருளாதார பாதிப்பு சாதாரண மனிதன் முதல் அரசாங்கம் வரை சந்தித்தனர். பல இடங்களில் பொருளாதார பாதிப்பால் இன்னமும் மேலே உயர முடியாத நிலை உள்ளது.

பெரிய பாதிப்பு இல்லை
இந்த நிலையில் 3ஆவது அலையும் 4 ஆவது அலையும் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை தரவில்லை. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2151 ஆக அதிகரித்துள்ளது.

கட்டாய மாஸ்க்
பல இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணியும் உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகர பேருந்தில் பயணிப்போர் மத்தியில் கொரோனா பரவல் விகிதம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுவை ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

தாம்பரம் முதல் பிராட்வே
அதன்படி தாம்பரம் முதல் பிராட்வே வரையிலான 36 கி.மீ. தூரத்திற்கு பயணிக்கும் 21 ஜி மாநகர பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 40 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுத்தத்திலும் 5 பயணிகள் ஏறுவது அல்லது இறங்குவது என்ற நிலையில் கொரோனா பாதித்த ஒரே ஒரு பயணியுடன் பாதி நிரம்பிய பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று செல்லும் போது 5 முதல் 9 பேருக்குத் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்லப்பட்டுள்ளன.

கொரோனா பாதித்த பயணிகள்
இதே போன்று கொரோனா பாதித்த பயணிகளின் எண்ணிக்கை, பேருந்தில் பயணிப்போர் எண்ணிக்கை மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றை பொருத்து தொற்று பரவும் விகிதமும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications