விரதம் இருப்பதால் உயிருக்கு ஆபத்தா? மாரடைப்பு ஏற்படுமா.. உங்க எல்லா சந்தேகத்திற்குமான பதில்
சென்னை: பொதுவாகவே நமது வீடுகளில் விரதம் இருக்கும் பழக்கம் இருக்கும்.. குறிப்பிட்ட நாட்களில் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். இது ஒரு பக்கம் என்றால் மறுபுறம் எடை குறைக்க intermittent fasting என்ற முறையைப் பின்பற்றுவார்கள். ஆனால், இதுபோல விரதம் இருப்பதால் மாரடைப்பு வரும் ஆபத்து இருப்பதாகச் சமீபத்தில் இணையத்தில் தகவல்கள் பரவின. இது உண்மை தானா.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பொதுவாகவே வீட்டில் இருப்போர் குறிப்பிட்ட நாட்களில் காலை சாப்பிட மாட்டார்கள். கேட்டால் விரதம் என்பார்கள். இதை அவர்கள் பல காலமாகப் பின்பற்றி வருகிறார்கள்.

விரதம்: அதேபோல மற்றொரு தரப்பினர் எடையைக் குறைக்க intermittent fasting முறையைப் பின்பற்றுவார்கள். intermittent fasting என்றால் குறிப்பிட்ட நேரத்தில் உணவைச் சாப்பிட்டுவிட்டு மற்ற நேரம் சாப்பிடாமல் இருப்பது. அதாவது காலை 9 மணி முதல் 5 மணி வரை நீங்கள் சத்தான உணவைச் சாப்பிட்டுவிட்டு.. மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோல குறிப்பிட்ட மணி நேரம் தினசரி சாப்பிடாமல் இருப்பதே intermittent fasting எனப்படும்.
மருத்துவர்கள் பலரும் இந்த intermittent fastingஆல் உடலுக்கு நல்லது.. இதைப் பின்பற்ற வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே இதுபோல விரதம் இருந்தால் உடலுக்குக் கெடுதல் என்றும் மாரடைப்பு ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவின. அதாவது வழக்கமாக உணவு சாப்பிடுவோருடன் ஒப்பிடும் போது, intermittent fasting இருப்போருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 1.9 மடங்கு அதிகமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் விளக்கம்: இதற்கிடையே இது தொடர்பாகப் பிரபல மருத்துவர் அருண்குமார் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கல்லூரி மாணவர்கள் படிக்கும் போது காலையில் சாப்பிட மாட்டார்கள்.. மதியம் கூட லைட்டாகவே சாப்பிடுவார்கள். இரவு உணவு தான் அதிகம் சாப்பிடுவார்கள். மதியம்- இரவு எனக் குறிப்பிட்ட 8 மணி நேரத்திற்குள் தான் இவர்கள் சாப்பாடு எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காக இதை intermittent fasting எனச் சொல்ல முடிய.. நிச்சயம் முடியாது.
அதேபோல விரதம் இருக்கும் நேரத்தைத் தவிர்த்துவிட்டு என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். குப்பையான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு விரதம் இருந்தாலும் பலன் தராது. எனவே, விரதம் இருக்கும் போல நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுவது ரொம்பவே முக்கியம்.
இயற்கையானது: விரதம் என்பது இயற்கையானது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் இயற்கையாகவே பின்பற்றும் முறை. எந்த விலங்காவது காலை, மதியம், இரவு என உணவு சாப்பிட்டுப் பார்த்து இருக்கிறீர்களா.. தேவையான அப்போது சாப்பிடும். இல்லையென்றால் விட்டுவிடுவோம். இதுவே இயற்கை.. இதுபோலத் தான் மனிதர்களும் இருந்துள்ளனர்.
நல்லது தான்: நாம் பல காலம் தினசரி 2 முறை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். 3 முறை சாப்பிடும் பழக்கத்திற்கு வந்தே சில நூறு ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. எனவே, விரதத்தால் மாரடைப்பு எல்லாம் ஏற்படாது. விரதம் இருந்தால் மாரடைப்பு வரும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு சொன்னது போல இல்லாமல் முறையாக 6 மாதங்கள் விரதம் இருந்தோரிடம் ஆய்வு நடத்தினால் சரியான முடிவுகள் கிடைக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications