சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.80,000 வரை சம்பளம்! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மாதம் ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மட்டுமல்லாது விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
சென்னையின் போக்குவரத்து பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இப்படியாக மெட்ரோ ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த சேவையை மேலும் சில மாவட்டங்களுக்கு நீடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதனை சாத்தியப்படுத்த கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்காக கோவைக்கு ரூ.9,000 கோடியும், மதுரைக்கு ரூ.8,500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். மேலும் சேலம் மற்றும் திருச்சி நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.
இப்படியாக மாநிலம் முழுவதும் தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பதவிகளுக்கான 08 பணியிடங்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக இருக்கிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 45ஆக இருக்க வேண்டும். இதில் அரசு வெளியிட்டுள்ள வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech / M.E / M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் அதிகபட்சமாக ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications