முதுகலை ஆசிரியர் பணி.. 1,996 காலிப்பணியிடங்கள்.. தேர்வு எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் நிலை உள்பட 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. குரூப் 2 தேர்வும் அதே தேதியில் நடைபெறுவதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி எப்போது நடைபெறும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது இந்த தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தி அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர், ஆசிரியைகளை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தான், தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 உள்பட 1,996 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான விண்ணப்பதிவு நடந்த நிலையில் தேர்வு எப்போது என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதாவது வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென இந்த தேர்வானது ஒத்தி வைக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அதே தேதியில் நடைபெறுவதால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு எப்போது நடைபெறும் என்று ஆசிரிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு, இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அதே நாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Combined Civil Services Examination - II (Group II and II A Services) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மேற்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 12.10.2025 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிக்கை (எண் 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.gov.in வாயிலாக இன்று(10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள்
தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் நிலை I - 57, உடற்கல்வி இயக்குநர் நிலை I -102 என்று மொத்தம் 1,996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பம் செய்வற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலான விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications