TNPSC குரூப் 2, 2ஏ.. 645 பணியிடங்கள்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ (TNPSC Group 2, 2A) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 645 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 13 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நிரப்பி வருகிறது. துறை வாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்றபடி அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது.

குரூப் 2 தேர்வு:
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பினை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே கடந்த ஜூலை 15 ஆம் தேதி 645 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வை அறிவித்தது.
பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது.
இதே போல உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் (குரூப் 2ஏ) 595 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது.
கல்வித் தகுதி:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு சில பதவிகளுக்கு மட்டும் பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
* குரூப் 2ஏ பதவிகளில் செயல் அலுவலர் பதவிக்கு விண்ணபிப்பவர்கள் மட்டும் 25 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க முடியும். உச்ச வயது வரம்பு கிடையாது.
* குரூப் 2 பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்ச வயது வரம்பாக நன்னடத்தை அலுவலர் பதவிக்கு 22, 26, வனவர் பதவிக்கு 21, சார் பதிவாளர் பதவிக்கு 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் வனவர் பதவிக்கு வயது உச்ச வரம்பு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
தேர்வு முறை
* டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் நேர்காணல் கிடையாது. முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப்படும்.
* குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இது தகுதி தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவர்.
* முதன்மைத் தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும். இரண்டிற்குமான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
முதல்நிலை தேர்வானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். முதன்மை தேர்வுகளானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். முதல்நிலை தேர்வானது வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும். முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 13 ஆம் தேதி ஆகும். இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: apply.tnpscexams.in












Click it and Unblock the Notifications