layoff : பெங்களூர், ஹைதராபாத்தில் மிகப்பெரிய வேலை இழப்பு ஏற்படுமா? ஐடி துறையில் என்ன நடக்கிறது
பெங்களூர்: பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற ஐடி துறையை மையமாகக் கொண்ட நகரங்கள் ஏஐ வளர்ச்சியால் மிகப்பெரிய வேலை இழப்பை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஏஐ ஆல் எந்த வேலையை எல்லாம் செய்ய முடியுமோ, இனி அத்தனை வேலையையும் ஏஐ செய்ய போகிறது. ஏஐ பரிமாணம் அதிகரித்தபடியே இருக்கிறது. எனவே ஓபன் ஏஐ சிஇஓ சொன்னது போல் வருங்காலத்தில் அவரது வேலையை கூட ஏஐ பார்க்க வாய்ப்பு உள்ளது. அப்படியான சூழல்கள் காரணமாக வேலை இழப்பு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது.
இன்றைக்கு ஐடி தொழில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு நிறுவனங்களும் இப்போது ஏஐ மூலம் பணிகளை மேற்கொள்ள விரும்புகின்றன. இதனால் பலருக்கும் வேலை பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது. மனிதனால் செய்ய முடியாத பல வேலைகளை ஏஐ செய்து வருகிறது.

அதேபோல் ஏஐ ஆல் செய்ய முடியாத வேலைகளும் உள்ளன. அந்த வேலைகள் தான் இனி மனிதனுக்கு கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. இப்போது ஏஐ என்பது எல்கேஜி குழந்தை போல் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கே பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது. வரும் காலத்தில் பெரிய அளவில் ஏஐ வளர்ந்தால்,அதன் தாக்கத்தால் பலரது வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
ஐடி துறையில் இப்போது வழக்கமான கோடிங், டேட்டா என்ட்ரி மற்றும் சில நிர்வாகப் பணிகள் போன்றவற்றை AI தானியங்குமயமாக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் இந்த வேலைகளைச் செய்யும் ஐடி ஊழியர்களின் தேவை குறைந்துவருகிறது. இவர்கள் தான் தற்போது அடுத்த கட்ட திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் வேலையை இழக்க வேண்டிய நிலை வரும் என்கிற நிலை உள்ளது.
அடுத்ததாக இந்தியாவின் சேவைத்துறையில் வொயிட் கலர் வேலைகளை உடனடியாக காலி செய்யும் திறன் கொண்டது என்று உலக வங்கியே கூறியுள்ளது. பழைய அவுட்சோர்சிங் மாதிரியை நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு AI ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சியை காரணம் காட்டி பணிநீக்கம் செய்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 218 ஐடி நிறுவனங்களில் சுமார் 1,12,700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல்வேறு வகையில் 48000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக அமேசான், யுபிஎஸ், மைக்ரோசாப்ட், மெட்டா, விப்ரோ, டிசிஎஸ், அசன்ஞர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளன. எனினும் பயன்படும் அளவிற்கு இல்லை என்றும் சுமார் 5 சதவீதம் அளவிற்கே வேலை இழப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஏஐ வளர்ச்சியால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஏஐ, மெஷின் லேர்னிங் என்ஜினியர்கள், டேட்டா சயின்டிஸ்ட்கள், ஏஐ மாதிரி சரிபார்ப்பவர்கள், ஏஐ ப்ராம்ப்ட் இன்ஜினியர்கள் போன்ற புதிய, அதிக மதிப்புள்ள வேலைகளை உருவாக்கி வருகிறது. ஐடி வல்லுநர்கள் ஏஐ தொடர்பான திறன்களை (AI literacy, Python, TensorFlow, PyTorch) வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.
அந்த திறனை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்பை தக்க வைக்க முடியும். ஏனெனில் ஏஐ திறமை கொண்ட பணியாளர்களுக்கு வழக்கமான ஐடி ஊழியர்களை விட 30-40% வரை கூடுதல் ஊதியம் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்போது வேலை இழப்பு ஏற்பட்டாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்கள், AI சார்ந்த வேலைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான மையமாக மாறி வருவதால், வேலை இழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
AI வளர்ச்சி என்பது ஐடி துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதால், வேலை இழப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் புதிய, அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிறார்கள். ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற ஐடி நிறுவனங்களுக்கு உள்ள சவால் என்னவென்றால், இருக்கும் ஊழியர்கள் விரைவாகப் புதிய ஏஐ திறன்களைக் கற்றுக் கொண்டு, இந்த மாற்றத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி முடியாமல் போனால் மட்டுமே, வரும் காலத்தில் வேலை இழப்பு தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.












Click it and Unblock the Notifications