படிக்க வெச்ச எம்.ஜி.ஆர் அழைத்தும் போகலை - புயல் வீசினாலும் தடம் மாறா கருணாநிதி விசுவாசி துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக சட்டசபை இன்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பண உதவியால் படித்து பட்டம் பெற்ற போதும் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக மறைந்த முன்னாள் கருணாநிதியின் தலைமையை விட்டு இமைப்பொழுதும் விலகாது இன்றைக்கு திமுகவின் மூத்த தலைவராக திகழ்கிறார் துரைமுருகன்.

திமுகவில் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் மறைந்துவிட்டனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் துரைமுருகன். அதனால்தான் திமுகவின் பொதுச்செயலாளராக, சட்டசபை முன்னவராக மரியாதைகள் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறார் துரைமுருகன். 1938-ம் ஆண்டு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் காட்பாடி அருகே உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் துரைமுருகன்.

குடும்ப வறுமையால் அன்று துரைமுருகன் கல்லூரியில் படிக்க பண உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டில் தமது 33 வயதில் முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார். காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றியும் பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.

Karunanidhis true loyalist Minister Duraimurugan and MGR

திமுகவிலேயே துரைமுருகன்

அந்த கால கட்டத்தில்தான் திமுகவில் செங்குத்து பிளவு ஏற்பட்டது. கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர்., திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகிறது. திமுகவில் இருந்து சாரை சாரையாக தலைவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். பின்னால் போகிறார்கள். எம்.ஜி.ஆரால் படிக்க வைக்கப்பட்ட துரைமுருகனும் அப்படித்தான் செல்வார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் துரைமுருகன் கருணாநிதி பக்கமே நின்றுவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு பதிலடி தந்தவர்

இது தொடர்பாக துரைமுருகனிடம் எம்.ஜி.ஆர். கேட்ட போது, நீங்க என்னை படிக்க வெச்சு உதவி செய்தீங்க.. என்னை வாழவைத்த தெய்வம் நீங்க.. ஆனால் என்னுடைய தலைவர் கருணாநிதி மட்டும்தான்.. அதனால் நான் உங்க கட்சிக்கு வரமாட்டேன் என பிடிவாதம் காட்டினார். துரைமுருகனின் இந்த பிடிவாதம் கருணாநிதியிடம் கூடுதல் நெருக்கத்தை கொடுத்தது. அதற்காக எம்.ஜி.ஆர். ஒன்றும் கோபித்துக் கொள்ளவும் இல்லை. துரைமுருகன் மீது எப்போதும் போல அன்புடன் இருந்தார் எம்.ஜி.ஆர். இத்தனைக்கும் சட்டசபையில் தமக்கு எதிராக அக்னி பிழம்பாக துரைமுருகன் வெடிக்கின்ற போதும் கூட கோபத்தைக் காட்டாதவர் எம்.ஜி.ஆர். ஏனெனில் எம்.ஜி.ஆர். என்னதான் தனிக்கட்சி தொடங்கி இருந்தாலும் கருணாநிதி மீது அத்தகைய மதிப்பு வைத்திருந்தார். சட்டசபையில் விவாதம் ஒன்றில் திமுகவுக்கு பதிலளித்து பேசிய வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வி.பி. பாலசுப்பிரமணியன், கருணாநிதி.. கருணாநிதி என அடிக்கடி குறிப்பிட்டு பேசினார். வி.பி. பாலசுப்பிரமணியத்தின் பதில் திமுகவுக்கு சரியான பதிலடியாக இருந்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். சட்டசபை கூட்டம் முடிந்ததும் வி.பி. பாலசுப்பிரமணியத்தை அழைத்து, பேசியது எல்லாம் நல்லாத்தான் இருந்தது பாலு.. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி.. கருணாநிதி என குறிப்பிட்டிருக்கக் கூடாது.. அதை தவிர்த்திருக்கனும்.. ஏன்னா எனக்கு அவர் கட்சித் தலைவராக இருந்தவர் என அறிவுறுத்தியவர் எம்.ஜி.ஆர். அப்படி ஒரு மரியாதையை கருணாநிதி காட்டியவர் எம்.ஜி.ஆர்.

கருணாநிதியிடம் மிக நெருக்கம்

எம்.ஜிஆர். மறைவுக்குப் பின்னர் திமுகவில் இன்னொரு செங்குத்து பிளவு வைகோவால் உருவானது. அப்போதும் கூட கருணாநிதியின் வலதுகரமாகத்தான் இருந்தார் துரைமுருகன். இது கருணாநிதியிடம் மிக மிக நெருக்கத்தை துரைமுருகனுக்கு உருவாக்கிக் கொடுத்தது. கருணாநிதி குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைவிட கருணாநிதியிடம் மிக நெருங்கியவராக இருந்தார் துரைமுருகன். அதைத்தான் இன்றைய சட்டசபை உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, நாங்களே பொறாமைப்படும் அளவுக்கு கருணாநிதியின் இதய சிம்மாசனத்தில் தனி இடம் பெற்றிருந்தவர் அண்ணன் துரைமுருகன் என கூறினார்.

திமுகவில் அடுத்தடுத்து பதவிகள்

திமுகவின் மாணவர் அணியில் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார் துரைமுருகன். கருணாநிதியுடனான நெருக்கமும் இயல்பாகவே திமுகவின் 2-ம் கட்ட தலைவராக உருவெடுத்ததாலும் திமுகவின் முதன்மை செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என அடுத்தடுத்து ஏற்றங்களை பெற்றார் துரைமுருகன். இந்த பதவிகளையும் அவ்வளவு எளிதாகவும் துரைமுருகன் பெற்றுவிடவில்லை. ஒவ்வொரு பதவி கிடைக்கும் போதும் ஆயிரத்தெட்டு சச்சரவுகள், வதந்திகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டபடிதான் இருந்தார் துரைமுருகன். சட்டசபையில் தனக்கு எதிராக துரியோதனனாக நடந்து கொண்டார் துரைமுருகன் என விமர்சித்தவர் ஜெயலலிதா. ஆனால் அதே சட்டசபை விவாதங்களில் துரைமுருகனின் அசால்ட்டு பேச்சுகளால் ஜெயலலிதா உள்ளிட்டோரை சிரிப்பலைகளில் மூழ்கடித்தவரும் துரைமுருகன்தான்.

சரியான கவுரவம் தந்த ஸ்டாலின்

திமுகவில் துரைமுருகன் நெருடல்களையும் சலசலப்புகளையும் எதிர்கொள்ளதவரும் அல்ல. தன் மகனுக்கு அடுத்தடுத்து தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் இருந்தார். பின்னர் கடந்த லோக்சபா தேர்தலில் சீட்டு வாங்கி மகன் கதிர் ஆனந்தை எம்.பி.யாக்கினார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த காலத்தில் துரைமுருகனே அதிமுகவுக்கு வரப் போகிறார் என அமைச்சர்கள் கிளப்பிவிட்டனர். அப்போதே எம்.ஜி.ஆர். அழைத்தே போகாதவர்... எடப்பாடி அழைத்தா போவார்? என பேசப்பட்டவர். சட்டசபை தேர்தலில் போராடி வென்று இப்போது நீர்வளத்துறை அமைச்சராகி இருக்கிறார். இதற்கு காரணம் சொந்த கட்சிக்குள் இதுவரை இல்லாத உள்ளடி வேலைகள்தான். இதனை அண்மையில் ஒரு கூட்டத்தில் பகிரங்கமாகவே சொல்லி எச்சரிக்கையும் வெடித்து துரைமுருகன் பேசியது பெரும் சர்ச்சையுமானது. சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டு திமுகவே தன் உயிர் மூச்சாக வாழும் துரைமுருகனுக்கு சட்டசபையில் மிக சரியான நேரத்தில் உயரிய கவுரவம் கொடுத்து கருணாநிதியின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+