சின்ன ஐடியாவால்.. ஜெப்டோ நிறுவனர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 19 வயசுல ஆளுக்கு ரூ.1000 கோடி சொத்து!
மும்பை: இந்த சமூகத்தில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை கடந்து செல்லாமல் அதற்கு நல்ல தீர்வை முன்வைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொருளீட்டி பெரிய பணக்காரர்களாவும் மாறுகிறார்கள். ரெட் பஸ் தொடங்கி, ஓயோ, ஓலா, ஸ்வீக்கி, நோ புரோக்கர் வரை இந்த பட்டியல் பெரியது. அப்படித்தான் Zepto நிறுவனத்தை ஆரம்பித்த 19 வயது இளைஞர்கள் ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் பெரிய பணக்கார்களாகி உள்ளனர்..
வெறும் 19 வயதில் ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் சுமார் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து 2022ம் ஆண்டுக்கான ஹுருன் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். "எப்புட்றா" என்று சிறுவனின் மீம் பாணியில் கேட்கத்தோன்றுகிறதா.. வாங்க எப்படி இது சாத்தியமாச்சு என்பதை பார்ப்போம்.
நம்ம ஊர்ல பலரும் ஒரு தொழில் முனைவோர் கனவை சுமந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்ற தயக்கம் அவர்களுக்கு இருக்கும். பணம், தொழில் நுட்ப ஆலோசனை, ரிஸ்க் எடுக்க இடம் கொடுக்காத குடும்ப சூழ்நிலை போன்றவற்றால் தங்கள் கனவுகளை அப்படியே புதைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

மளிகை பொருட்கள்
இதில் தான் ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தயங்கி நிற்கையில் இவர்கள் துணிந்து தங்கள் கனவை நிறைவேற்ற முயன்றுள்ளார்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை தான் கையில் எடுத்துள்ளார்கள். சாப்பாட்டுக்கு டெலிவரி வந்துவிட்டது. ஆனால் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய நிறுவனங்கள் இந்தியாவில் பெரிதாக இல்லை.

கைவல்யா வோஹ்ரா
இதனை கண்ட ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் அவசர அவசரமாக அந்த துறையில் அதிரடியாக களம் கண்டனர். இந்தியா முழுவதும் களம் இறங்கினார்கள். 'ஜெப்டோ' என்ற பலசரக்கு சமான்களை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பலரும் போட்டி போட்டு முதலீடு செய்யும் அளவுக்கு சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவமாக 'ஜெப்டோ' உயர்ந்து. இதன் காரணமாக
ஜெப்டோ' நிறுவனம் தொடங்கிய 5 மாதங்களிலே அதன் மதிப்பை 570 மில்லியன் டாலராக உயர்ந்தது.

பணக்காரர்கள் பட்டியல்
பெரும் முதலீட்டாளர்கள் தாங்களாகவே முன்வந்து முதலீடுகளை செய்தனர். இந்தியாவின் பெரு நகரங்களில் ஜெப்டோ சேவையை செய்து வருகிறது. இப்போமு இந்த நிறுவனத்திற்கு வெறும் ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் ஜெப்டோவின் நிறுவனரான ஆதித் பலிச்சாவும், இணை நிறுவனரான 19 வயதான கைவல்யா வோஹ்ராவும் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து 2022ம் ஆண்டுக்கான ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றும் விட்டார்கள்.

ஜெப்டோ நிறுவனர்கள் கதை
யார் இந்த ஜெப்டோ நிறுவனர்கள்? துபாயில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சாவும் 9வயதில் இருந்து நண்பர்கள். அடுத்ததாக அவர்கள் உயர்கல்வியை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார்கள். ஆனால் ஏனோ அவர்களுக்கு கணிணி கல்வி கசந்தது. கணிணி கல்வியை கைவிட்டு விட்டு தொழில் முனைவராக விரும்பினர்.

என்ன காரணம்
இந்தியர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சாவும் அதற்கு தேர்ந்தெடுத்த ஊர் மும்பை. இரண்டு பேரும் நேராக வாடகைக்கு வீடு எடுத்து மும்பையில் என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது, அவர்களால் அத்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்களை உடனே டோர் டெலிவரி பெற முடியவில்லை என்பதை கண்டனர். டோர் டெலிவரி பெற பல நாட்கள் ஆகிறது என்பதையும் கண்டனர். இதையடுத்து மளிகை கடை சரக்குககளை டோர்டெலிவரி செய்யும் வேலையை தொடங்கலாம் என முடிவுக்கு வந்தனர்.

கிரானாகார்ட்
கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த அவர்கள், தங்களை சுற்றி இருந்தவர்களுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளனர். மும்பையில் உள்ள உள்ளூர் கடைகளில் இருந்து மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான 'கிரானாகார்ட்' என்ற ஸ்டார்ட்அப்பை ஆரம்பத்தில் துவக்கினர். 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மார்ச் 2021 வரை செயல்பாட்டில் இருந்த அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் பின்னாளில் 'Zepto' எனும் நிறுவனமாக மாறியது. கொரோனா நெருக்கடி பலரையும் துயரத்தில் ஆழ்த்திய போது, மளிகை பொருட்கள் டோர் டெலிவரி என்ற ஆப்பை தொடங்கிய இவர்கள், இப்போது வேறவெவலில் வளர்ந்துவிட்டார்கள்.

சென்னையில் டெலிவரி
மளிகை பொருட்களை தொடக்கத்தில் 30 நிமிடங்கள் மற்றும் 45 நிமிடங்களுக்கு உள்ளாக அவர்கள் விநியோகித்தனர் . ஆர்டர் செய்து 4 முதல் 5 நாட்கள் பொருட்களின் டோர் டெலிவரிக்காக காத்திருந்த மக்களுக்கு சிறந்த சேவையாக இருந்தது. இதனால் மும்பையை தாண்டி டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் வளர்ந்தனர். பின்னர் 15 நிமிடங்களில் டெலிவரி செய்யும் முறையை அறிமுகும் செய்தனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதலீட்டாளர்கள்
வாரம் வாரம் மளிகைப் பொருட்களை வாங்கும் மக்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக மாறியது. இப்போது 10 நிமிட விநியோக பார்முலாவை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதனால் மிகவேகமாக அதிநவீன முதலீட்டாளர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்று ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்கியும் விட்டார்கள்.

குவிந்த முதலீடு
இப்போது இந்தியாவில் பெரிய டெலிவரி நிறுவனங்களான பிக்பாஸ்கெட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், ஜொமாட்டோ நிறுவனத்தின் ப்ளிங்கிட், கூகுள் நிறுவனத்தின் டன்ஸோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் முதலான நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜெப்டோ நிறுவனம் வளர்ந்திருக்கிறது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு வருடத்திற்குள்ளே 3 முறை முதலீட்டைத் திரட்டியுள்ளது. ஒய்சி என்ற முதலீடு பெற்றுத் தரும் நிறுவனத்தின் ஏலத்தின் போது ஜெப்டோ நிறுவனம் முதல் சுற்றில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருக்கிறது.

11 நகரங்களில் விரிவு
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்று ஜெப்டோ அசத்தி உள்ளது. இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை 11 நகரங்களில் விரிவாக்கம் செய்து 200க்கும் அதிகமான டார்க் ஸ்டோர்களை உருவாக்கி உள்ளது. ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கூட்டணி ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வரும் பணக்காரர்கள் பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டது.

ஹுருன் இந்தியா பட்டியல்
அந்த படடியலில் ஜெப்டோ நிறுவனர்களான 19 வயதான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகிய இருவரும் இந்தியாவில் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து இடம்பிடித்துள்ளனர். ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில், 90களில் பிறந்த 13 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் கைவல்யா வோஹ்ரா-வின் சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய் ஆகும். இதனால் இப்பணக்காரர்கள் பட்டியலில் 1,036 வது இடத்தில் உள்ளார். இதேபோல், ஆதித் பலிச்சா 1,200 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பணக்காரர்கள் பட்டியலில் 950வது இடத்தில் இருக்கிறார்.

என்ன காரணம்
இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் 2022 ஆம் ஆண்டுப் பட்டியலில் சுமார் 1,103 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை குவித்து பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பலரை ஏழையாக்கியது ஆனால் வெகுசிலரை மிகப்பெரிய கோடீஸ்வரரகள் ஆக்கி உள்ளது. அவர்கள் யார் என்றால், ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தான். எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டியை சேவையை பெற விரும்புவர்களுக்கு சேவை தந்தவர்கள் தான். இதை பற்றி யோசித்து 2022ல் செயல்படுத்திய எல்லாருமே இன்று கோடீஸ்வரர்களாகவோ லட்சாதிபதிகளாகவோ இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆம் நாம் தொடக்கத்தில் சொன்னது தான். இந்த சமூகத்தில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை கடந்து செல்லாமல் அதற்கு நல்ல தீர்வை முன்வைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொருளீட்டி பெரிய பணக்காரர்களாவும் மாறுகிறார்கள்/ அப்படித்தான் Zepto நிறுவனத்தை ஆரம்பித்த 19 வயது இளைஞர்கள் ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் பெரிய பணக்கார்களாகி உள்ளனர்..












Click it and Unblock the Notifications