முகத்தில் தெளித்த சாரல்...
"சங்கு துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது"
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரபஞ்சத்தை உள்ளடக்கியது தான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும் அடக்கியதை பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும் அடங்கியிருக்க வேண்டும்.
ஒரு புல்லின் நுனி கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியும் காயப்படுகிறது.
ஒரு பறவையின் சிறகு சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
மலையாளத்தில் ஒரு கவிதையுண்டு
""இந்தப் பிரபஞ்சம்
சிலந்தி வலையைப் போல் பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட கண்ணவிழ்ந்து போகலாம்.""
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய இழைகளால் ஆன "இணையம் தான்
அது பரிமாற அழகிய தகவல்கள் மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டவை.
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும் முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்து தந்தை வடிவமெனின்
வளர்ச்சியே குழந்தையாய் நீடித்திருப்பதன் அடையாளம்.
பனித்துளியும் நீர்தான்-
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு அளவில் தான்-
இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில் இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில் தான்.
சங்கு துவாரத்திற்குள் இருக்கும் தண்ணீர் -
வானத்தை பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம் முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற வானத்தைக் காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த முகாந்தரமும் இல்லை.
சங்கும் கடலிலிருந்து தான் வருகிறது
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு காடு இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு கடல் இருக்கிறது.
வானம் என்பது என்ன?
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம்எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப் பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க முடியும்.
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்
சூரியனால்
நட்சத்திரங்களால்
உயரமாகச்செல்லும் ஆகாயவிமானங்ளால் தரப்படுகிறது.
இருக்கிறவை சேர்ந்து இல்லாததற்கு,
முடிவு இல்லாத ஒன்றுக்கு வடிவம் தருகிறது.
சங்குகள் இருக்கும் நீரூக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும், நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான் தெரிகின்றன வானமாய்.ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்
சங்குக்குள் காது வைத்துக் கேட்டால்
பேரிரைச்சைல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்த பேரிரைச்சல் எப்படி நுழைந்தது.
பிரபஞ்சம் புரியாத புதிர.
அதைப் புதிர் என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்.
சங்குகள் மட்டுமல்ல
கடலில் கூட தெரிவது வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின் நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி
நமக்குள்ளும் இறைமை பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை உணர்ந்தால்
இறைமை வானமாய்ப் பிரதிபலிக்க சம்மதிக்கும்.