தமிழகத்தில் இன்று
அங்கே ஒரு அணி..இங்கே ஒரு அணி
தேசிய அளவில் பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி, தமிழகத்தில் திமுக - பாஜகவுக்கு எதிராக வலுவான இரண்டாது அணி,இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செயல் திட்டம். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அக்கட்சியின்தலைவர்கள் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பிரகாஷ் காரட் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கட்சியின் மாநிலச் செயற்குழுவை கூட்டி தமிழக கூட்டணி நிலவரம் குறித்து விவாதித்த கையோடு, தமாகா தலைவர் மூப்பனாரை சந்தித்துதேசிய அளவில் மூன்றாவது அணியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையையும் நடத்தி முடித்துள்ளனர் இந்த இரு தலைவர்களும்.
தேசிய அரசியலில் எப்போதெல்லாம் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அப்போதெல்லாம் அதற்கு பிள்ளையார் சுழி போட்ட கட்சியாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் இருந்திருக்கிறது. காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியைஏற்படுத்தியதிலும், அதன் தொடர்ச்சியாக பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த தேவகவுடா, குஜ்ரால் தலைமையில் ஐக்கிய முன்னணியைஏற்படுத்தியதிலும் இக்கட்சிக்கே பெரும்பங்கு உண்டு.
தேசிய அளவில் எந்த கொள்கையை இக்கட்சி கடைபிடிக்கிறதோ, அதை செயல்படுத்திக் காட்டுவதில் இக்கட்சி ஒரு வைராக்கிய உணர்வோடுசெயல்படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
மதவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதில் உறுதிபட நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயல் திட்டம்என்பது, பாஜக அல்லாத ஒரு ஆட்சியை மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதுவே.
அதற்காக இக்கட்சி தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொள்கைச் சமரசம் செய்து கொண்டது என்று கூடச் சொல்லலாம். மதவாதமா? ஊழலா?என்று இக்கட்சி நடத்திய பட்டிமன்றத்தில் மதவாதமே பெரியது என்று முடிவெடுத்து, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் போன்ற "ஊழல் குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களுடன் கை கோர்த்தது.
அதன் காரணமாகப் பல விமர்சனங்களுக்கு இக்கட்சி ஆளானது. ஆனாலும், தனது பிடியை விட்டுக் கொடுக்காமல் மதவாதத்தை எதிர்த்துப்போராடுகிறது என்று மார்க்சிஸ்ட் வட்டாரம் சொல்கிறது.
ஊழலோடு சமரசம் செய்து கொள்ளும் போது ஏற்படும் சங்கடங்களையும் நன்றாக உணர்ந்துள்ள இக்கட்சி தமிழகத்தில் பாஜக - திமுகவுக்கு மாற்றாகவலுவான அணி அமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு தான் அதிமுகவுடன் உறவை நீடிக்க விரும்புகிறது.
மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி அந்த அணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூடிய இதர கட்சிகளையும் இணைத்துபோட்டியிட்டால், அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் பற்றியும் இக்கட்சி அலசி ஆராய்ந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை நடந்த மாநிலச் செயற்குழுவில் இதுபற்றிய விவாதம் நடந்துள்ளது. கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரட்"தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதித்து வருகிறோம் என்று ஒப்புக் கொண்டார்.
திமுக - பாஜக அணி பலம் பொருந்தியதாக இருக்கும் போது அதை வீழ்த்த வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி, அதிமுகதலைமையில் மதச்சார்பற்ற அணியை ஏற்படுத்தி, அதை வலுவாக்க வேண்டும் என்பதில் தான் அக்கறை செலுத்த வேண்டும் என்று ஒரு கருத்தும்,திமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், இருட்டில் நிற்கும் குதிரையாக டாக்டர்ராமதாஸ் இருப்பதையும் கருத்தில் கொண்டு இப்போதே அவசரப்பட்டு அதிமுக தலைமையில் தான் அணி என்ற முடிவுக்கு போய் விடக் கூடாது என்றுஇன்னொரு கருத்தும் இக்கட்சி மட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திமுக -பாஜக அணியை வீழ்த்த அதிமுக தனது வலிமையை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில் பாமக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொள்ள துடிப்பதையும், இக்கட்சி மனதார ஏற்றுக் கொள்கிறது.
சாதிப் பலம் பொருந்திய இக்கட்சியின் துணை, மதவாதத்தை வீழ்த்த அவசியம் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், தலித் விரோதகட்சி என்ற முத்திரையை முடிந்த வரையில் நீக்குவதற்கு பாமக முயற்சிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் விரும்புவதாக தெரிகிறது. ஏனெனில்மார்க்சிஸ்ட் கட்சிக்கென தலித் மக்களிடம் தனி ஆதரவு இருக்கிறது.
மாநில அளவில் இத்தகைய விவாதங்களில் இக்கட்சி ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சுர்ஜித்தை, தமாகா தலைவர்மூப்பனார் சந்தித்துப் பேசினார். சுர்ஜித் அழைப்பின் பேரில் நடந்த இந்த சந்திப்பில் தேசிய, மாநில அரசியல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகதெரிகிறது.
இதுபற்றி சுர்ஜித் அளித்த பேட்டியில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைவது தவிர்க்க முடியாதது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்வது அவசியம்.
மூப்பனாரும் காங்கிரஸ்காரர் தான். அவரைப் போல் நிறைய மதசார்பற்ற இயக்கங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஓரணியில் கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு, தேசிய, தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications