3--வது முறையாக 28-ம் தேதி காட்டுக்குப் போகிறார் கோபால்
சென்னை:
வீரப்பனின் கோரிக்கைகளுக்கான இரு மாநில அரசுகளின் தெளிவான பதில்களுடன் மூன்றாவது முறையாக வரும் 28 ம் தேதி நக்கீரன் கோபால்காட்டுக்குச் செல்கிறார்.
வீரப்பனின் நிபந்தனைகள் படி கர்நாடக சிறையில் உள்ள 121 கைதிகளை விடுவிக்கவும், அதிரடிப்படையின் பாதிப்புக்கு ஆளான கிராம மக்கள்நிவாரணத்திற்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கவும் இரு மாநில அரசுகளும் முன் வந்துள்ளன.
இந்த தகவல்களுடன் மீண்டும் 28 ம் தேதி காட்டுக்கு செல்கிறார் கோபால். சென்னையில் இரு மாநில முதல்வர்களும் நடத்திய இரண்டு மணி நேரஆலோசனைக்கு பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா வாய் திறக்கவில்லை. கடைசி வரைமவுனமாகவும், டென்ஷனாகவும் இருந்தார்.
தமிழக முதல்வர் மட்டும் பேச்சுவார்த்தையின் விவரங்கள் குறித்து அளவோடு பேட்டியை முடித்துக் கொண்டார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:
வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்றிரண்டு கோரிக்கைகள் மீது ஏற்பட்ட சந்தேகங்களை கோபால் பதிவு செய்து விளக்கியுள்ளார். அதில் முக்கியமானகோரிக்கையான கர்நாடக சிறையில் உள்ள 121 கைதிகள் பற்றியது.
அவர்களை ஜாமீனில் விடுவிக்க உரிய ஏற்பாடுகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. வருகிற 28 ம் தேதி அதற்கான வாய்தா. அன்றுஅவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும்.
தமிழக, கர்நாடக அரசுகளின் அதிரடிப்படையினர் கடந்த 1992-93 ம் ஆண்டுகளில் வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது காட்டுப்பகுதியில்உள்ள கிராமங்களில் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பாக விசாரிக்க மனித உரிமை கமிஷன் சார்பில் சதாசிவம் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் தனது அறிக்கையை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரப்பன் வேண்டுகோள்படி அந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதே போல்இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதும் வீரப்பனின் கோரிக்கை.
சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகு என்னென்ன நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறதோ அவற்றைநிறைவேற்ற இரு மாநில அரசுகளும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இதுபோன்ற புதிய முடிவுகளுடனும், அதற்கான விளக்கங்களுடனும் மீண்டும் வருகிற 28 ம் தேதி நக்கீரன் கோபால் காட்டுக்குச் செல்வார் என்றார்முதல்வர்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி: கோபாலுடன் 5 தமிழ் தீவிரவாதிகளும் செல்வார்களா?
பதில்: ஏன் நீங்களும் செல்லத் தயாராக இருக்கிறீர்களா
கே: தீவிரவாதிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டதா?
ப: நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
கே: கைதிகள் பரிமாற்றம் இருக்குமா?
ப: இப்போது சாப்பாடு பரிமாற வேண்டிய நேரம். கிளம்புவோம் என்றபடி பேட்டியை முடித்துக் கொண்டார்.
கடைசி வரை மவுனம் சாதித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை விடாமல் கார் வரை தொடர்ந்து சென்ற செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர்.
வீரப்பன் 5 நாள் கெடு விதித்துள்ளாராமே, புதிய கோரிக்கைகள் விடுத்துள்ளாரா என்று சராமரியாக கேள்விகள் எழுப்பினர்.
எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பாத கிருஷ்ணா எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தெரியும் என்று வானத்தை நோக்கி கையை உயர்த்திக் காட்டிவிட்டு காரில் ஏறி கிளம்பி விட்டார்.












Click it and Unblock the Notifications