வருகிறது தமிழ் இன்டர்நெட் பல்கலை ..ஆளுநர்
சென்னை:
தமிழகத்தில் 1 மாத்தில் தமிழ் இன்டர்நெட் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என்று மாநில ஆளுநர் பாத்திமா பீவி தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக சட்டசபையின் இறுதி கூட்டத்தொடர் கவர்னர் பாத்திமா பீவியின் உரையுடன் வெள்ளிக்கிழமைதொடங்கியது. தமிழகத்தில் 11 வது சட்டசபையின் இறுதிக் கூட்டத்தொடரான இதில் வரும் 29 ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
சட்டசபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து பாத்திமா பீவி பேசுகையில், வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் உள்ளகிராமங்களுக்கு இன்டர்நெட் - தொலைபேசி இணைப்புக்களைக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வயர்லஸ் தொழில்நுட்பத்தை இந்திய தொழில்நுட்பக் கழகம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவிலேயே கிராமங்களுக்கு இன்டர்நெட் தொலைபேசி இணைப்புக்கொடுக்கும் முதல் மாநிலம் தமிழகமாகும்.
இதேபோல, இன்னும் ஒரு மாதத்தில், தமிழ் இன்டர்நெட் பல்கலைக்கழம் துவக்கப்படவுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழகத்தின் கலை,இலக்கியம், வரலாறு போன்றவற்றை உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் வகையில் இரண்டாவது டைடல் பார்க் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் பல்வேறு சமூக சேவைத் திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் சமூக பாதுகாப்பு நிதியகம் அமைக்கப்படும் என்றார் அவர்.
கவர்னர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தமிழில் படித்தார். ஆளுநர் உரைக்குப் பின்னர் முதல்நாள்கூட்டம் முடிவடைந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications