பாஜக பேரணி: கருணாநிதி புறக்கணிப்பு
டெல்லி:
ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வாஜ்பாய் தலைமையில் பாரதீய ஜனதா நடத்தவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணியில் கலந்துகொள்ள திமுக தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அதே போல கூட்டணியில் இன்னொரு முக்கியக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் இந்தப்பேரணியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு இந்தப் பேரணியில் கலந்து கொள்வது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் இதில் கலந்து கொள்ளகருணாநிதி தயாராக இல்லை.
இந்தப் பேரணி வாஜ்பாய் அரசுக்கு முழு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், ஆயுத பேர ஊழலே நடக்கவில்லை என்று சொல்வதற்காகவும்நடத்தப்படுகிறது. ஆனால், ஊழல் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுவிட்டதால் ஊழல் நடக்கவில்லை என்ற பிரச்சாரம் எவ்வளவுதூரம் எடுபடும் என்று தெரியவில்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதே கூட நடந்துள்ள ஊழலுக்கு ஆதரவக நிற்பது போன்ற தோறறத்தை உருவாக்கும் என்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என சந்திரபாபு நாயுடு கூறிவிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் கூட கலந்து கொள்ளுமா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் எதுவும்வெளியிடப்படவில்லை.
முன்னதாக, டெல்லியில் நடந்து வரும் பாஜகவின் இரண்டு நாட்கள் செயற்குழுக்கூட்டம் முடிந்தவுடன், ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தத்திட்டமிட்டுள்ளனர் பாஜகவினர்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என தொண்டர்கள் தங்களை வலியுறுத்துவதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். பழியை தொண்டர்கள் மீதுபோட்டுவிட்டு பேரணியில் கலந்து கொள்ளாமல் தப்பிக்க திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐக்கிய ஜனதா தளமும் இதே மன நிலையில் தான்உள்ளது.
பாஜக பேரணியில் கலந்து கொண்டால் அது தங்கள் கட்சியின் இமேஜையும் பாதித்து விடும் என்று திடமாக நம்புகின்றனர் கூட்டணிக் கட்சியினர்.
தமிழக முதல்வர் கருணாநிதி தனக்கு தேர்தல் பணிகள் இருப்பதால் பாஜக பேரணியில் கலந்து கொள்ள முடியாது என்று தகவல் அனுப்பிவிட்டார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டனர். வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் அவர்கள் பாஜகபேரணியில் கலந்து கொள்வது சாத்தியமில்லாத ஒன்று.
இருப்பினும் பாஜகவினர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
பாஜக செய்தித்தொடர்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், நாங்கள் 10 மாநில முதல்வர்களுக்கு பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளோம். இதில் 6 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
பேரணியைத் தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஹரியானா முதல்வர்ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் உரையாற்றுவார்கள்.
இவர்கள் தவிர, சமதா கட்சி நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார், தகவல் தொடர்புத்துறை அமைச்சர்ராம் விலாஸ் பாஸ்வான், லோக் சக்தி கட்சித் தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டே, மின்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய விமானத்துறை அமைச்சர் சரத்யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications