கோவை குண்டுவெடிப்பு .. கணவர், குழந்தையுடன் ஆயிஷா கைது
சென்னை:
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கடந்த 4 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த ஆயிஷா மற்றும் அவரது கணவர் இப்ராகிம் கனி ஆகியஇருவரும் பீகார் மாநிலத்தில் வைத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நகரமே சுடுகாடானது.
இதில் தொடர்புடைய அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்ளிட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மனித வெடிகுண்டாக செயல்பட திட்டமிட்டிருந்த ஆயிஷா மற்றும் அவரதுகணவர் இப்ராகிம் கனி ஆகியோர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தனர்.அவர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு வெடிகுண்டுகளுடன், ஆயிஷா தம்பதி சென்னைக்குத் தப்பி வந்தது. கோவையைப் போல சென்னையிலும்வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
கோடம்பாக்கத்தில் அவர்கள் தங்கினர். ஆனால் அவர்கள் கோடம்பாக்கத்தில் இருந்த செய்தி போலீஸாருக்கு ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் அங்கிருந்து பறந்து விட்டனர்.
ஆனால் அவர்கள் இருந்த இடத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 2 லட்சம் பரிசுவழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்தது.
இந்த நிலையில், ஆயிஷாவும், இப்ராகிமும் பீகாரில் பெட்டியா மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் பெட்டியா விரைந்தனர். அங்கு இப்ராகிம் அப்துல்லா என்ற பெயருடனும், தாஹிரா என்ற பெயரில் ஆயிஷாவும்குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்களுக்கு குழந்தையும் இருந்தது. போலீஸ் படை அவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தது. பீகாரில் கைது செய்யப்பட்ட அவர்கள் வெள்ளிக்கிழமைசென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டைக் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு, நீதிபதி பூபாளன் உத்தரவிட்டார். இதையடுத்துஇருவரும், குழந்தையுடன் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications