ஈழத் தமிழர்களை தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ
சென்னை:
ஈழத் தமிழர்களை எப்போதும் போல் நான் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன் நிருபர்களிடம் அவர் பேசினார். அப்போது வைகோ கூறுகையில்,
பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒரே காரணத்துக்காக தவிர்க்க முடியாமல் நான் பொடாவை ஆதரித்தேன்.
ஆனால், பத்திரிக்கை சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் பறிபோகும் என்று நான் கருத்துத் தெரிவித்தேன். இதை தேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திலேயே நான் எடுத்துச் சொன்னேன். இதனால் தான் இந்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது நான் கலந்து கொள்ளவில்லை.
மத்தியில் ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசுகள் மிசா, தடா போன்ற சட்டங்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தி வந்தன.
அதே போலவே பொடா சட்டத்தையும் தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி என்னைக் கைது செய்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் அராஜக ஆட்சிக்கு எங்கள் கட்சியினரின் கைதுகள் மிக நல்ல உதாரணமாகியிருக்கின்றன.
தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள். குடிக்க தண்ணீர் இல்லை, குடிக்க கஞ்சி இல்லை. விவசாயிகளில் ஆரம்பித்து நெசவாளர்கள், தொழிலாளர்கள் என யாரும் சந்தோஷமாக இல்லை.
மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகிவிட்ட ஜெயலலிதா, மக்கள் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் தான் தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இவற்றையெல்லாம் மதிமுக எதிர்த்து அறவழியிலேயே போராட்டங்களை நடத்தும். எந்த விதமான வன்முறையிலும் எங்கள் கட்சி ஈடுபடாது. ஈழத் தமிழர்களை நான் எப்போதும் போலவே தொடர்ந்து ஆதரிப்பேன்.
இலங்கையில் அடுத்தடுத்து வந்த சிங்கள அரசுகளால் தமிழ் மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள். அதை எதிர்த்தேன். அது தவறா? அங்கு தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் பலி வாங்கப்பட்டார்கள். இதை எதிர்ப்பது தவறா?
முதலில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை முதலில் அமைதியாகத் தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்த்தார்கள். ஆனால், அளவுக்கு மீறி கொலைகள் நடந்தபோது தான் அதை எதிர்த்து ஆயுதம் தாங்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டார்கள்.
இப்போது புலிகள் தலைமையில் அந்தப் போராட்டம் நடந்து வருகிறது. புலிகளை அனைத்து பிற அமைப்புகளும் தலைமை அமைப்பாக ஏற்றுக் கொண்டுவிட்டன. இப்போது புலிகளுடன் அந் நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயே பேச்சு நடத்தி வருகிறார்.
அந்தப் பேச்சுவார்த்தையை குலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இது தமிழர்களின் முதுகில் குத்தும் செயல்.
புலிகளை இலங்கை விவகாரத்தில் ஆதரிக்கிறோம். அதில் எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தமிழகத்தில் புலிகளின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. தமிழகத்தின் அமைதியைக் குலைப்பதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை.
சக தமிழர்கள் என்ற முறையில் புலிகளை ஆதரித்தோம். அதற்காக எங்களை பொடாவைக் கொண்டு ஒடுக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா. இந்த அடாவடித்தனமும் அடக்குமுறையும் நிச்சயம் தோற்கும். நீதி வெல்லும்.
எனது கைது விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை நாட மாட்டேன். மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை நான் என்றும் ஆதரித்ததில்லை.
கடந்த ஆட்சியில் தமிழகத்தை ஜெயலலிதா கொள்ளையடித்தபோது கூட நான் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கேட்டதில்லை.
இந்த விவகாரங்களில் மக்கள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் வைகோ.
கிட்டத்தட்ட ஒரு மாத கால சிறை வாசத்துக்குப் பிறகும் தனது வழக்கமான சிரிப்புடனும் உற்சாகத்துடனும் இருந்தார் வைகோ. ஆனால், அவரது உடல் கொஞ்சம் இளைத்திருந்தது.












Click it and Unblock the Notifications