தமிழர்களை பிரிக்க உண்ணாவிரதமா? ரஜினிக்கு பாரதிராஜா கேள்வி
நெய்வேலி:
தமிழர்கள் ஒன்றுபடக் கூடாது என்பதற்காகத் தான் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர் என்று ரஜினியை மிகக் காட்டமாகத்தாக்கினார் இயக்குனர் பாரதிராஜா.
நெய்வேலியில் பேரணி முடிந்த பிறகு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுக் கூட்டத்தில் பேசிய பாரதிராஜா கூறியதாவது:
என் இனிய தமிழ் மக்களே, எங்கள் அறைகூவலை ஏற்று அலை அலையாய் குவிந்திருக்கிறீர்கள். கன்னியாகுமரியில் இருந்துதமிழ்நாடு முழுவதும் மண்ணின் மைந்தர்கள் கனத்த சுமையோடு காவிரியில் தண்ணீர் கேட்டு வந்திருக்கிறீர்கள்.
நான் இங்கே வரும்போது உணர்ச்சிவசப்பட்டுவிடாதீர்கள் என்று நண்பர்கள் எச்சரித்தார்கள். உணர்ச்சிவசப்பட்டால் என்ன தப்பு.தமிழன் உணர்ச்சிவசப்பட்டால் என்ன தப்பு?. உணர்ச்சிவசப்படுபவன் தான் தமிழன். உணர்ச்சிவசப் பட்டால் தான் அவன்மனிதன்.
பயந்து பயந்து தான் கால் நூற்றாண்டுகளாய் தமிழன் தன் விலாசம் இழந்துவிட்டு நிற்கிறான். அவனை கொஞ்சம் உசுப்பி விட்டால்விண்ணுக்கும் மண்ணுக்கு உயர்ந்து நிற்பான்.
இங்கே தமிழன் அமைதியாகப் பேரணி நடத்தி காட்டினான். எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ரத்த ஆறை ஓட்டவில்லை.தன் மனச் சுமையை அமைதியாய் வெளிக்காட்டினார்கள்.
கர்நாடகத்தில் நடந்தது போல யார் படத்தையும் எரிக்கவில்லை. தமிழன் கண்ணியமானவன் என்பதை மீண்டும்நிரூபித்துவிட்டான்.
காயந்து போன பூமிக்காக நொந்து போன மனங்களுடன் ஒன்றாய் கூடி கோரிக்கையைச் சொல்லி இருக்கிறோம்.
எங்களுக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு எங்கள் உழைப்பில் எங்கள் மண்ணில் உருவாகும் மின்சாரத்தைக் கொடுக்காதேஎன்று சொன்னால் என்ன தப்பு?
ஊர்வலம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா என்று கேட்கிறார்கள். தனியே போய் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர்வருமா? நம்மைப் பிரித்தாள பார்க்கிறார்கள். எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமிழன் ஒன்று சேர்ந்துவிடக் கூடாதுஎன்பதற்காக.. அவன் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்ற பயம் காரணமாக.. தமிழனைப் பிரிக்க இந்த உண்ணாவிரதம்நடக்கிறது.
தமிழா, சிந்தித்துப் பார். இன்னும் நீ விழித்துக் கொள்ளவில்லை என்றால் உன்னை விட என்னை விட மடையான் யாரும் இருக்கமுடியாது.
மக்கள் விழித்தால் உன் சுயரூபம் தெரிந்துவிடும் என்ற அச்சம் உன்னை உண்ணாவிரதம் உட்கார வைக்கிறது.
இங்கே ஒன்று கூடிய எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லையா? எங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. ஆனால்,தமிழகத்தின் நலன் என்ற ஒரே காரணத்தால் எங்கள் வேறுபாடுகளை மறந்து இன்று ஒற்றுமையாய் உங்கள் முன் நிற்கிறோம்.
காவிரிப் பிரச்சனையை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களை காலம் நிச்சயம் மன்னிக்காது என்றார் பாரதிராஜா.












Click it and Unblock the Notifications